(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கெவிளியாமடு பகுதியில் வைத்து கிராமஉத்தியோகத்தர் மற்றும் அதிகாரிகளை மிகவும் கேவலமான வார்த்தைகளால் பேசி தமிழர்கள் எல்லோரும் புலிகள் எனக்கூறி கடும் சொற்களினால் மட்டக்களப்பு மங்களராம விகாரதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் திட்டியதனை கண்டித்தும், அவரை மாவட்டத்தில் இருந்து வெளியேற்றுமாறும், சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கோரி மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் வாயில்கதவினை பூட்டி பட்டிப்பளைப் பிரதேச சிவில் சமூகம் இன்று(15) செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
உரிய தேரருக்கு நடவடிக்கை எடுக்கும் வரை தமது ஆர்பாட்டத்தினை நிறைவு செய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டு பட்டிப்பளை பிரதான வீதியை மறைத்து வீதியில் இருந்தவாறு, கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 07.30மணிக்கு ஆரம்பமான ஆர்பாட்டத்தில் தொடர்ச்சியாக குறித்த மதகுரு அரசஅதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாகவும், இதற்கு முன்னர் இருந்த பிரதேச செயலாளரையும் செயலகத்தில் வைத்து தாக்கமுற்பட்டதாகவும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையெனவும், குறித்த சம்பவம் இடம்பெற்றபோது பொலிஸாரும் எவ்வித நடவடிக்கை எடுக்காமால் இருந்ததாகவும் இதற்கான தீர்க்கமான தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது சம்பவ இடத்துக்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் சிசிர தெத்ததந்திரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் குறித்த மதகுருவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்ற உறுதி மொழியையடுத்து, காலை 10.15 மணியளவில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு பிரதேச செயலக நடவடிக்கைகளும் ஆரம்பமாகின.
ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள், பொதுமக்கள் அதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் ஜனதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் கையளிப்பதற்கான மகஜர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனால் கையளிக்கப்பட்டுள்ளது.












