இளைஞர்களின் வேலைவாய்ப்பு தொடர்பில் நாங்கள் எப்போதும் அக்கறையுடன் இருக்கின்றோம்! - விவசாய அமைச்சர் கே.துரைராசசிங்கம்

(மோகன்)
இந்த நியமனமானது நாங்கள் அடுத்த கட்டத்திற்கு போவதற்கான ஒரு ஆரம்ப செயற்பாடாகவே இருக்கின்றது. எமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை தொடர்பில் நாங்கள் எப்போதும் அக்கறை கொண்டவர்களாகவே இருக்கின்றோம். என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை திருகோணமலை மாகாண விவசாய அமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் கால்நடை அபிவிருத்திப் பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேலைவாய்ப்பு நியமனங்களின் போது மிகக் கூடுதலான அளவில் விண்ணப்பம் கோருவதும் மிகக் குறைந்த அளவிலானளவர்களுக்கு நியமனம் கொடுக்கின்றதுமான நிகழ்வானது மலையைத் தள்ளி எலியைப் பிடிப்பது போன்றவாறானதொரு செயற்பாடகவே இருக்கின்றது. இதனால் ஏற்படும் நேர விரயமும், இதற்கான பரீட்சை ஏற்பாடுகளுக்கான செலவீனங்களும் நோக்குகின்ற போது அது  விளைவுக்கும் மேற்கொள்ளும் வேலைக்கும் ஒத்திசைவாக இருக்காத ஒரு நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்குக் காரணம் வேலையில்லாத பிரச்சினை.
தற்போது எமது இந்த நியமன விடயத்தைப் பொருத்த வரையில் விவசாயப் போதனாசிரியர்கள் 16 பேர், கால்நடை அபிவிருத்திப் பரிசோதகர்கள் 35 பேருக்காக நாங்கள் எவ்வாறு தெரிவை நடாத்துவது என்று சிந்திக்கின்ற போது. பொதுச் சேவை ஆணைக்குழு இந்த விடயம் தொடர்பாக எமது அமைச்சின் செயலாளரிடமோ அல்லது திணைக்களத்தின் பணிப்பாளர்களிடமோ கலந்துரையாடாமல் மேற்கூறப்பட்டவாறு இந்த விண்ணப்பங்களை கோரிவிட்டது.

உண்மையில் எமது அமைச்சின் செயலாளர் அல்லது திணைக்களப் பணிப்பாளர்களை சரியான முறையில் அணுகியிருந்தால் எமது தேவைக்கேற்றவர்கள் எங்கிருந்து படிப்பினை முடித்து வெளியேறுகின்றார்கள் என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற விதத்தில் விண்ணப்பங்களைக் கோரியிருந்தால் இவ்வாறு எழுத்துப்பரீட்சை வைத்து அதில் பங்குபற்றியவர்கள் குறைவு என்று பின்னர் அதற்காக நேர்முகப்பரீட்சை வைத்து தெரிவு செய்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
இன்னுமொரு புறம் நாங்கள் விண்ணப்பங்கள் கோருகின்ற போது படிப்பினை முடித்து வெளியேறுகின்றவர்கள் தொகை குறைவாக இருந்தது. அவர்கள் பரீட்சை முடித்திருந்தாலும் அதற்கான சான்றிதழ்கள் அவர்களிடம் இல்லாமல் அவர்களுக்குக் கிடைக்கப் பெறாமல் இருந்தது. ஆனால் எமது சுற்றுநிருபத்தின் பிரகாரம் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுகின்றவரின் கையில் சான்றிதழ் இருக்க வேண்டும். அந்த ஒரு நிலை இல்லாமல் இருந்ததன் காரணமாகத்தான் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு விண்ணப்பத்தாரிகளை நாங்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்க முடியாமல் இருந்தது. இருப்பினும் வந்தவர்களில் தெரிவுசெய்யக் கூடியவர்களை நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம்.

தற்போது பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு இது தொடர்பான உண்மைத் தண்மை விளங்கி இருக்கின்றது மேற்படி நியமனங்களுக்கு குறைவான அளவு விண்ணப்பதாரிகளே இருப்பதால் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரத் தேவையில்லை என்றும் நேரடியாக நேர்முகப் பரீட்சை மட்டத்திலேயே இதனைச் செய்து முடிக்க முடியும் என்றும் தற்போது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

பிரதமர் அவர்கள் ஆட்சியைப் பொறுப்பேற்கின்ற போது பத்து இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கொடுப்பதாகக் கூறியிருந்தாhர். ஆனால் நாங்கள் உழைக்கின்ற ஒவ்வொரு ரூபாவிலும் எண்பது சதம் கடனாகக் கொடுக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம் என்று நிதியமைச்சர் தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு எமது நாட்டின் பொருளாதார நிலை இருக்கின்றது. இந்நிலையில் வேலைவாய்ப்பு என்பது எமது இளைஞர்களுக்கு பாரிய சவாலாகவே இருக்கின்றன.

எனவே வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டியது, வெற்றிடங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டியது, இளைஞர்களை நாட்டிக் அபிவிருத்தியில் பங்குகொள்ளச் செய்ய வேண்டியது என்கின்ற அந்த மிகவும் முக்கியமான விடயங்களைக் கையாழ்வதில் தற்போது இப்படியான சிக்கல்கள் இருந்து கொண்டிருக்கின்றன இருந்த பொழுதிலும் எதிர்காலங்களில் நாங்கள் இவற்றை நிவர்த்தி செய்யலாம் என நம்புகின்றோம்.

அண்மையில் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் குழுவினர் வருகை தந்த போது இங்கு வேலைளவாய்ப்பினைக் கூடுதலாக கொடுக்க கூடிய தொழிற்துறைகளை மேற்கொள்ளக் கூடிய அவளிவிற்கு நிதி நல்குதல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அதன் அடிப்படையில் தான் எமது ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் ஒரு ஆடைத் தொழிற்சாலையையாவது கேட்டுக் கொண்டோம். இவ்வாறு எமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை தொடர்பில் நாங்கள் எப்போதும் அக்கறை கொண்டவர்களாகவே இருக்கின்றோம். எமது பிரதேசத்திற்குரிய வேலைவாய்ப்பை சீர் செய்வதற்கு நாங்கள் எவ்வளவு அக்கறையோடு இருந்தாலும் தற்போது நாங்கள் கை கட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றோம். 

இந்த நியமனமானது நாங்கள் அடுத்த கட்டத்திற்கு போவதற்கான ஒரு ஆரம்ப செயற்பாடாகவே இருக்கின்றது. இவர்ளது நியமனத்தை மற்றையவர்களது நியமனத்துடன் சேர்த்து கொடுப்பதற்கு நினைத்தால் இவர்களுக்கு தாமதப்படும் என்பதற்காக இதனை முதற்கட்டமாகக் கொண்டு ஆரம்பித்துள்ளோம் இனி வரும் காலங்களில் மிகுதி இருக்கும் நியமனங்களுக்கும் ஆட்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.