இலங்கை
சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பதிவாளர்
பிரிவினால் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையொன்று நேற்று (24) காலை இடம்பெற்றிருந்தது.
இலங்கை
பதிவாளர் திணைக்களத்தினால் வழங்கப்படும் சட்ட வலுவுடைய ஆவணங்களை எவ்வித சேவைக்
கட்டணங்களுமின்றி இலவசமாகப் பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு ஆலையடிவேம்பு பிரதேச
செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்த குறித்த நடமாடும் சேவைக்கு இலங்கை சட்ட
உதவி ஆணைக்குழுவின் அக்கரைப்பற்று பிராந்திய அலுவலகம் அனுசரணை வழங்கியதுடன் அவ்
அலுவலக அதிகாரிகளால் குறித்த நடமாடும் சேவைக்கு வருகை தந்திருந்த பொதுமக்களுக்கு
இலவச சட்ட ஆலோசனைகளும் அங்கு வழங்கிவைக்கப்பட்டிருந்தன.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் மற்றும் இலங்கை சட்ட உதவி
ஆணைக்குழுவின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் பி.எம்.கலாமுதீன் ஆகியோர் இணைந்து
ஏற்பாடு செய்திருந்த குறித்த நடமாடும் சேவையை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்
வி.ஜெகதீஸன் தலைமைதாங்கி நடாத்திவைத்தார்.
ஆலையடிவேம்பு
மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்திருந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட
பொதுமக்களுக்கு பிறப்பு, இறப்பு, திருமணம் சம்மந்தப்பட்ட பதிவுகள் மற்றும் காணாமல்
போனவர்களுக்கான இறப்புப் பதிவுகள் வழங்கல் போன்ற சேவைகள் எவ்வித கட்டண அறவீடுகளுமின்றி
முடிந்தவரை உடனடியாக வழங்கிவைக்கப்பட்டதோடு, அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வது
தொடர்பான ஆலோசனைகளும் கிடைக்கப்பெற்றன.
குறித்த
நடமாடும் சேவையைத் தொடங்கிவைத்து தலைமையுரையாற்றிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், இலங்கை
சட்ட உதவி ஆணைக்குழுவின் அக்கரைப்பற்று பிராந்திய அலுவலகம் இதுபோன்ற நடமாடும்
சேவைகளை முன்னரும் நடாத்தியுள்ளதாகக் குறிப்பிட்டதோடு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தேச
வழமையின் பிரகாரம் திருமணம் முடித்துப் பல வருடங்கள் கழிந்த நிலையில் திருமணப்
பதிவுச் சான்றிதழ்கள் இல்லாது பல்வேறு சட்டப் பிரச்சனைகளை எதிர்நோக்கியிருந்த
தமிழ் குடும்பங்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கி, துரித கதியில் செயற்பட்டு அக்குடும்பங்களுக்கு
காலங்கடந்த திருமணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுத்த சட்ட உதவி ஆணைக்குழு
உத்தியோகத்தர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து நன்றி கூறினார்.
ஆலையடிவேம்பு
பிரதேசத்தின் கிராமமட்டங்களில் சேவையாற்றும் அரச உத்தியோகத்தர்களான கிராம
அலுவலர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பூரண ஒத்துழைப்போடு
இடம்பெற்ற குறித்த நடமாடும் சேவையில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவிலிருந்து சட்டத்தரணிகளான
திருமதி. கலைவாசனா துஷ்யந்தன் மற்றும் எம்.எச்.எம்.ருஸ்தி ஆகியோர் சட்ட
ஆலோசகர்களாகச் செயற்பட்டதுடன், நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எம்.எம்.ஏ.சுபைர்
நிகழ்வுகளை நெறிப்படுத்தியிருந்தார்.
இந்நடமாடும்
சேவையில் பொதுமக்களுக்கான சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் பொருட்டு ஆலையடிவேம்பு
பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கிராம அலுவலர்களுக்கான நிருவாக
உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ மற்றும் பிரதம முகாமைத்துவ உதவியார் கே.ஹேந்திரமூர்த்தி
ஆகியோரும் பிரசன்னமாயிருந்ததுடன், வறிய குடும்பங்களைச் சேர்ந்த 15 பாடசாலை மாணவ
மாணவிகளுக்கு சேவைக் கட்டணமின்றி அவர்களது பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்கிவைத்திருந்தனர்.












