எஸ்.மோசேஸ் - அரச தேசிய விருதினைப் பெற்று தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்தார்!

கலாசார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கைத் தொலைக்காட்சி அரச தேசிய விருது வழங்கும் விழா கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் 2016.11.21 திங்கட்கிழமை இடம்பெற்றது.

அதன்போது தொலைக்காட்சித் துறை சார்ந்த விருதுகள் வெற்றியீட்டிய கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன. அதில் ஒரு போட்டிப் பிரிவாக காணப்படும் 'தொலைக்காட்சித் துறைசார் ஆய்வு நூலுக்கான தேசிய விருது' எஸ்.மோசேஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இவருக்கு ஐந்து தேசிய தொலைக்காட்சி விருதுகள் கடந்த வருடங்களில் வழங்கப்பட்டுள்ளன. அவை அவரது நிகழ்ச்சிகளுக்காகும். இம்முறை அவரது அறிவுப்புலம் மற்றும் ஊடக ஆராய்ச்சி என்பவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளது. அவரது 'இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - வரலாற்றியல் ஆய்வு' என்ற ஆராய்ச்சி நூலுக்கே தேசிய அரச விருது கிடைத்துள்ளது. 

கடந்த 2011ஆம் ஆண்டு இதே அரச தேசிய விருதினை இவரது மனைவியும் கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமான எம்.பகீரதி அவர்கள் பெற்றிருந்தார். 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்விருது வழங்கும் நிகழ்வுகளில் இதுவரை இரண்டு தமிழ் நூல்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை இவர்கள் இருவரையுமே சாரும். அதற்கு முன்னர் எவரும் பெறவில்லை. 

எஸ்.மோசேஸ் பல்கலைக்கழக மட்டத்திலான பத்துக்கு மேற்பட்ட சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இம்மாநாடுகளில் ஆய்வு மதிப்பீட்டாளர் மற்றும் இணைத்தலைமை போன்ற நிலைகளிலும் ஆராய்ச்சிப் பணி ஆற்றியுள்ளார். 

ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், மதுரைகாமராஜ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து வேர்விக் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் என்பவற்றில் பட்டம், பட்டயம், முதுமாணி, முதுதத்துவமாணி மற்றும் கலாநிதி பட்டங்களுக்கான ஆராய்ச்சிகளையும் கற்கைகளையும் தொடர்ந்துள்ளார். 

தொடர்பாடல் மற்றும் ஊடகத்துறை சார்ந்த புலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில நூல்களுக்கு சாகித்திய விருது உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளன.