அம்பாறை
மாவட்ட அபிவிருத்திக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவித் திட்டத்தின் கீழ் ஐக்கிய
நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட (UNDP) நிறுவனத்தின் 3.5 மில்லியன் ரூபாய்
நிதியுதவியோடு ஆலையடிவேம்பில் அமைக்கப்படவுள்ள இரும்பு உருக்குப் பட்டறைக்கான
அடிக்கல் நடும் வைபவம் ஆலையடிவேம்பு நெசவு நிலைய வளாகத்தில் அண்மையில்
இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்குப் பிரதம
அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
கவிந்திரன் கோடீஸ்வரன் கலந்து சிறப்பித்ததோடு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்
பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, UNDP நிறுவனத்தின்
திட்ட முகாமையாளர் பி.மனோஜ் ஆகியோருடன் ஆலையடிவேம்பு பிரதேச இரும்புத் தொழிலாளர்
சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அக்கரைப்பற்று,
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. தங்கவேல்
சிவாச்சாரியார் சுபநேரத்தில் சமயச் சடங்குகளை நடாத்திவைக்க முதலாவது அடிக்கல்லை
நாடாளுமன்ற உறுப்பினரும், அவரைத் தொடர்ந்து பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல்
பணிப்பாளர் ஆகியோரும் அடிக்கற்களை நட்டுவைத்தனர்.
அதனைத்
தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்
கோடீஸ்வரன், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பரம்பரை வழியாக இரும்புத் தொழிலில்
ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் புதிய நுட்பங்களில் கைதேர்ந்தவர்களாக இருந்தபோதிலும்
தலைநகரில் பயன்படுத்தப்படுவதைப்போன்று பாரிய இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தி தமது
உற்பத்திகளை மேற்கொள்ள இத்திட்டத்தின் மூலம் UNDP நிறுவனத்தால் முறையான பயிற்சிகள்
வழங்கப்படவுள்ளதால் அவர்களது அவர்களது தொழிற்திறன் மேலும் அதிகரிப்பதுடன், சர்வதேச
சந்தையை நோக்கி அவர்களது உற்பத்திகள் நகர சிறந்ததொரு சந்தர்ப்பம் இத்திட்டத்தின்
மூலம் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
அவரைத்
தொடர்ந்து அங்கு கருத்துரைத்த பிரதேச செயலாளர் ஜெகதீஸன், இத்திட்டத்தில்
இணைத்துக்கொள்ளப்படவுள்ள இரும்புருக்குத் தொழிலாளர்களிடமிருந்து
எதிர்பார்க்கப்படும் நேர்க்கணியப் பெறுபேறுகளே எதிர்காலத்தில் இத்தொழிலை
மேம்படுத்துவதற்கு தாம் UNDP நிறுவனத்திடமிருந்து மேலும் உதவிகளை
பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.
இறுதியாகப்
பேசிய UNDP நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மனோஜ், தற்போது அமைக்கப்படவுள்ள
இரும்புத் தொழிற்பட்டறையில் உற்பத்தி செய்யப்படவுள்ள வெளியீட்டுப் பொருட்களை
உள்ளூரிலும் விற்பனை செய்யும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச சபையால் சாகாம
வீதியிலுள்ள பொதுச் சந்தைக் கட்டத்தில் விற்பனை நிலையத்துக்கான இடம்
வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததுடன், தமது குறித்த திட்டத்துக்கு ஆதரவு வழங்கி,
குறித்த விற்பனை நிலையத்தை வழங்கிய பிரதேச சபையின் செயலாளருக்கு நன்றி
தெரிவித்தார்.












