மட்டக்களப்பில் பொலிஸாரினால் வீதி விபத்துக்களை தடுக்கும் விழிப்புணர்வு பேரணி

மட்டக்களப்பு பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினால் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக ஏற்பாடுசெய்த விழிப்புணர்வு பேரணி நிகழ்வு திங்கட்கிழமை (12)காலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்திப் பூங்கா அருகில் ஆரம்பமான இப் பேரணி திருமலை வீதியூடாக பொலிஸ் சந்திவரை சென்று மீண்டும்   நகர் வரை சென்று நிறைவுபெற்றது.

'விபத்துகள் அற்ற வீதிகளை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இப் பேரணி நிகழ்வில் மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள், முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, சிறந்த சாரதிகள் எப்போதும் போக்குவரத்து ஒழுங்குகளை கடைப்பிடிப்பர், வீதி ஒழுங்குகளை மதித்து விபத்துக்களை தவிர்ப்போம், சட்டத்தை மதிக்கும் சாரதிகளை வரவேற்கின்றோம், அதிக வேகம் மரணத்தை உண்டுபண்ணும், மது போதையில் வாகனம் செலுத்த வேண்டாம் போன்ற விடயங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு சாரதிகளும் மக்களும் இப் பேரணியில் கலந்துகொண்டனர்.