(படுவான் பாலகன்) மதுபானசாலை மக்களுக்கு தேவையில்லை என முடிவு செய்தால் எல்லோரும் இணைந்து இல்லாமல் செய்ய முடியும். அதற்கு எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரன் குறிப்பிட்டார்.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைகளை அகற்றவேண்மென பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை(12) முதலைக்குடாவில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கேட்டுகொண்டதற்கு பதிலளித்து பேசுகையிலே இதனை தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில் மக்கள் நினைத்தால், மது அருந்துவதை நிறுத்தினாலும் மதுபானசாலைகள் பல தானாகவே மூடப்படும் எனவும் கூறினார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலே இரண்டு மதுபானசாலை நிலையங்கள் அமையப்பெற்றுள்ளதினால், மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது. அன்றாடம் உழைக்கும் பணத்தில் அதிகபங்கினை மதுபானத்திற்கே செலவு செய்கின்றனர். இதனால் பல குடும்பங்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். மேலும் பிரசித்திபெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமையப்பெற்று புனித பூமி என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான மதுபானசாலைகள் அமைந்து புனிதத்தை கெடுப்பதாகவும், கலாசார சீரழிவுகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதினால் மதுபானசாலைகளை அவ்விடங்களில் இருந்து அகற்றவேண்டுமென அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதன்போது கேட்டுக்கொண்டனர்.












