குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வழங்கும் உதவியை சரியாக திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும். - கிழக்கு விவசாய அமைச்சர்

தமது வாழ்வாதாரத்தினை பூர்த்திசெய்து குடும்ப பொருளாதார நிலையினை உயர்த்துவதற்காக வழங்கப்படும் உதவிகளை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்தி அவ்வுதவி எதற்காக வழங்கப்பட்டது எனும் எண்ணத்தை மனதில் வைத்து அதனை சாதித்துக் காட்டவேண்டும். என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

அமைச்சரின் தனிப்பட்ட நிதிப்பங்களிப்பின் மூலம் வந்தாறுமூலைப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சிலருக்கு சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் கல்விச் செயற்பாடுகளுக்கு கடந்த செவ்வாயன்று (13ஆம் திகதி) உதவிகள் வழங்கிவைத்து உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவ்விடத்தில் அவர் மேலும் பேசுகையில், தமது தேவையறிந்து ஒருவரால் அல்லது ஒரு அமைப்பினால் வழங்கப்படும் உதவிகள் சிறிதானாலும் பெரிதானாலும் அதை வைத்துக்கொண்டு வாழ்கையில் முன்னேறவேண்டும். வாழ்க்கையில் எதிலும் திட்டமிடல் என்பது அவசியம் சிறந்த முறையில் திட்டமிட்டு வாழந்தால் நாம் அனைவரும் எதிர்காலத்தில் முன்னேற்றகரமான வாழ்கையை வாழலாம். நாம் முன்னேற்றகரமாக வாழும் பட்சத்தில் நமது கிராமங்கள், பிரதேசங்கள் தானாகவே முன்னேற்றமடையும்.

முன்னரும் சரி தற்காலத்திலும் சரி பலர் வறுமை நிலையில் வாழ்ந்துகொண்டு பல சாதனைகளை படைத்துள்ளனர். இதில் குறிப்பாக மிகவும் குடும்ப பொருளாதார சுமைக்கு மத்தியில் பலர் தமது பிள்ளைகளை நல்ல முறையில் கற்பித்து வைத்தியராகவும் பொறியியலாளராகவும் உருவாக்கியுள்ளனர்.

கல்வி ஒன்றே வாழ்வில் என்றும் நிலைத்திருக்கும் அழியாத சொத்து. என்ன கஸ்டங்கள் தோன்றினாலும் அதனை ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு ஊட்டவேண்டும். தமது பிள்ளைகளை நற்பிரஜையாக வளர்த்து பலரும் மதிக்க தகுந்தாற்போல் வாழவைக்கும் பெரும் பங்கு பெற்றோருக்கே உள்ளது. என அவர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கே.செயோன் மற்றும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தா.தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.