பொலிஸ் காவரலண் காணியை விடுவிக்குமாறு கோரி பிரார்த்தனை கவன ஈர்ப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் .

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவல் அரண் காணியை விடுவிக்கக் கோரி கிராம மக்கள் ஒன்று திரண்டு பிரார்த்தனை கவன ஈர்ப்பில்  ஈடுபட்டனர்.
சனிக்கிழமை (31.12.2016) முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். வியாழேந்திரன், ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உட்பட இன்னும் பல செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

'எங்களை அரவணைக்கும் சுவாமி ராமதாஸ் நிறுவனத்தின் காணியை ஒப்படையுங்கள்'. என்ற வாசகங்களைத் தாங்கியவாறு கருணா சுவாமி ராமதாஸ் தர்ம நிறுவனத்தினால் நடாத்தப்படும் வாழ்வாதார கிராம மக்களும் மாணவர்களும் இந்த கவன ஈர்ப்பில்  ஈடுபட்டனர்.

ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக்க பீரிஸ் ஸ்தலத்திற்கு விரைந்து கிராம மக்களின் கோரிக்கையைக் கேட்டறிந்தார். இது பற்றி பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.

அங்கே கவன ஈர்ப்பாளர்களுடன் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். வியாழேந்திரன், ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் சுவாமி ராமதாஸ் நிறுவனத்தின் கருணா இல்ல முகாமையாளர் ஆர். முருகதாஸ் ஆகியோர் மேற்படி காணி காலதாமதமின்றி பொதுத் தொண்டுப் பணிகளுக்காக உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.