மக்களோடு மக்களாக அரசியல்வாதிகள் இல்லை!

(படுவான் பாலகன்) கைக்கு எட்டியது வாய்க்கு கிடைக்கவில்லை என்று நம்மவர் கூறும் கூற்றுப்போலதான் தமிழர்களது வரலாறும் இலங்கை நாட்டிலே இருந்து கொண்டிருக்கின்றது.  ஒப்பந்தம் என்பார்கள், சமாதானம் என்பார்கள், பின், சரிவராது என்பார்கள் இதுதான் தமிழர்கள் கற்றுக்கொண்ட பாடங்களாக இருந்து கொண்டிருக்கின்றது. பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், முப்பது வருடம் போராட்டம் அதற்பயனாக உயிர் தொடக்கம் உடைமை வரை சொல்ல முடியாத இழப்பு என்று பலவற்றை இழந்து நொந்து, நொருங்கி 2009 யுத்தம் மௌனித்தற்கு பிற்பாடு மகிந்த அரசு ஆட்சி செய்த காலப்பகுதியில் தமிழர்களது தீர்வு குறித்து பெரிதும் பேசப்படாத நிலையில் புதிய அரசினை அமைக்க வேண்மென்ற சிறுபான்மையினத்தவரின் பலத்தினால் புதிய ஆட்சி மாற்றமும் ஏற்படுத்தப்பட்டு நல்லாட்சி என்று சொல்லால் கூறப்படுகின்ற மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதை சூழலில் தமிழர்களது தீர்வு குறித்து அரசியல் ரீதியாக பேசக்கூடிய எதிர்கட்சி தலைமையை பல வருடங்களுக்கு பிற்பாடு தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்;றிருக்கின்றது. இவ்வாறான சூழலை பயன்படுத்தி தமக்கான தீர்வுத்திட்டத்தினை வழங்கவேண்மென்ற தமிழ்மக்களின் கோரிக்கைக்கேற்ப தீர்வு விரைவில் கிடைத்துவிடும், பொறுமையாக இருங்கள் என அடிக்கடி சம்பந்தன் கூறிக்கொண்டிருக்கின்ற அதேவேளை இத்தீர்வு 2016க்குள் கிடைக்குமென்று ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் அதற்கு பிற்பாடு எதிர்வரும் தீபாவளிக்கு இடையில் கிடைக்க வேண்டுமென கூறிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்மக்களும் தமக்கான தீர்வு சமஸ்டியாகதான் அமைய வேண்டுமென்று கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில் சமஸ்டி வழங்ககூடாது, இதுபற்றி நினைத்துக்கூட பார்க்ககூடாது எனவும் பெரும்பான்மையின அரசியல்வாதிகளும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் கூட நல்லாட்சி அரசின் பங்காளி கட்சியான ஹெல உறுமய குறிப்பிடுகின்ற போது பிரபாகரனால் இலங்கையில் ஈழத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதேபோல சம்பந்தனாலோ ஏனைய அரசியல்வாதிகளாலையோ சமஸ்டியை ஏற்படுத்த முடியாது. இந்த கனவிற்கு சிங்கள பௌத்தர்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டிருக்கின்றமையிலிருந்து தமிழர்களுக்கான தீர்வு சமஸ்டியை வழங்குவார்களா? என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க இன்னோர்பக்கம் சம்பந்தன் கூறுகின்றார். அரசியலமைப்பு சாசனம் அனைத்து மக்களின் விருப்பை பெற்றுதான் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறிக்கொண்டிருக்கின்றார். இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா அண்மையில் சமஸ்டிபற்றி குறிப்பிடுகின்றபோது, ஒற்றையாட்சி மூலம் தீர்வை பெறுவதற்குதான் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வரவேண்டும். அதைவிடுத்து கிடைக்காத ஒருவிடயத்திற்காக காத்திருப்பதை விட கிடைக்ககூடிய விடயத்தை வேறுவடிவில் பெற்றுக்கொள்வதில் தவறில்லை என்றும்;, இதைதான் தமது மக்கள் விரும்புகின்றனர்  எனவும் கூறியிருந்தார். இவ்வாறான கருத்துக்களின் மூலமாக மக்களுக்கு சந்தேக உணர்வினை ஏற்படுத்தினாலும் அவ்வவ்போது தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த அரசியல்வாதிகளும் சமஸ்டிதான் தீர்வு வேறு ஒன்றிற்கும் மாற்றுக்கருத்து இல்லை என்பதனையும் கூறிக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக தமிழரசிக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா அண்மையில் இவ்விடயத்தினை கூறியிருந்தார். எது எவ்வாறு இருந்தாலும் தமிழர்களின் வரலாற்றில் தீர்வு கிடைக்கப்போவது போன்று தென்படும் ஆனால் கிடைக்கப்பெறாது. இதுதான் கடந்துவந்த பாதையாக இருந்தாலும் கிடைத்தால் மகிழ்ச்சிதான். அத்தீர்வுக்காக  மட்டும் காத்திருக்க முடியாது. 

உரிமை என்பது தமிழ் மக்களுக்கு எவ்வளவு அவசியமானதோ அதேபோன்றுதான் ஏனைய சமூகத்திற்கு இணையாக தமிழ் சமூகமும் தனிநபர் அபிவிருத்தியில் இருந்து தாம் வாழும் சூழல்வரை சமனாகவேண்டிய, சமனாக்கவேண்டிய தேவை எல்லோருக்கும் இருந்து கொண்டிருக்கின்றது. இவைபற்றிய தெளிவான சிந்தனையும், செயற்பாடும், திட்டமிடலும் அரசியலில் இருக்கின்ற மக்களின் வாக்கினைப்பெற்று மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களுக்கு  இருக்க வேண்டும்.

கடந்த முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்களில் எத்தனை பேர் இன்றும் தமது உணவை பெறுவதற்கான பிரயத்தனத்தில் சிரமங்களை, வேதனைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்காக நீண்டு நிலைக்ககூடிய செயற்பாடுகளை எத்தனை மக்கள் பிரதிநிதிகள் முன்னெடுத்திருக்கின்றனர்? எல்லோரும் மக்களை கவர்வதற்காக முன்னாள் போராளிகள் பற்றியும் தமிழ்மக்களின் வேதனைகளையும் கூறிக்கொண்டிருப்பதே எஞ்சியுள்ளதாகவிருக்கின்றது. உதவிகள் செய்யாவிட்டாலும் அவர்களுடன் அன்பாக சிறிது நேரம் பேசினாலே அவர்களது மனதில் சந்தோசம் ஏற்பட்டுவிடும். 

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மை இனமாக தமிழ் மக்கள் வாழுகின்ற நிலையிலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ஆறு மாகாணசபை உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு இருந்து கொண்டிருக்கின்றது. இம்மாவட்டத்தினை இருபகுதிகளாக பிரிவுபடுத்தி கூறுவார்கள் ஒருபகுதி எழுவான்கரை மற்றைய பகுதி படுவான்கரை படுவான்கரைப்பகுதியே அதிகளவில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகவும், உயிர்களை யுத்தத்திலே காவுகொடுத்த மக்களாகவும் இருந்து கொண்டிருக்கின்றனர். இப்பகுதிகள் கிராமப்புறங்களாவே இருந்து கொண்டிருக்கின்றது. எழுவான்கரைப்பகுதியே மாவட்டத்தின் நகர்ப்புற பகுதிகளாக இருக்கின்றமையால் அங்குள்ள மக்களுக்கான வசதி வாய்ப்புக்கள் செறிவாக இருக்கின்றது. ஆனால் படுவான்கரைப்பகுதியிலே விவசாயத்தினை செய்தும், கூலிவேலை செய்தும் தமது அன்றாட ஜீபனோபாயத்தினை கொண்டு செல்லும் மக்களுக்கு நவீனத்துவ வளர்ச்சியினால் தொழிலின்றி வாழ்க்கை எனும் போராட்டத்திலே இறங்கி தவிர்த்துக் கொண்டிருக்கின்ற துர்பாக்கிய நிலை இங்கு இருந்து கொண்டிருக்கின்றது. 

படுவான்கரைப்பகுதி மாணவர்கள் முற்றுமுழுதாக பாடசாலை கல்வியைதான் நம்பி இருக்கின்றவர்கள், இவர்களுக்கான பிரத்தியேக  கல்வி நிலையங்கள் இன்மையினால் பாடசாலையில் கற்பிப்பதைதான் பரீட்சைக்கு பயன்படுத்துகின்றனர். ஆனாலும் இப்பகுதியிலேதான் அதிகளவான ஆசிரியர் பற்றாக்குறையும் இருந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் இன்மையால் பல மாணவர்கள் இப்பாடங்களில் சித்திபெறாமால் உயர்தரத்திலே கற்க முடியாமல் பாடாசாலைகல்வியை நிறைவு செய்து கொள்ளுகின்றனர். அவ்வாறு நிறைவு செய்தாலும் அடுத்தகட்டம் தொழில்வாய்ப்பின்மையினால் தமது, சகோதரங்களையும், பெற்றோர்களையும் விட்டு மத்திய கிழக்கு நாடுகளிலே தனிமையில் சென்று தொழில் செய்து தமது வாழ்க்கையை கொண்டு சென்றுக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு சென்றாலும் போதிய வருமானங்களும் கிடைக்காததினால் தாம் கடன்பெற்று சென்ற பணத்தினை வட்டியுடன் சேர்த்து கட்டிமுடிப்பதற்கே இரண்டு மூன்று வருடங்கள் எடுக்கின்றன. படுவான்கரையில் ஒரு வீட்டுக்கு ஒருவர் என்ற வீதத்தில் இவ்வாறு துன்பங்களை அனுபவித்து வேறு நாடுகளில் தொழில் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

யுத்தத்திலே கணவனை இழந்த பெண்கள் தமது குடும்பங்களை சுமந்து கொண்டிருக்கின்றனர். அவர்களும் தமக்கு தெரிந்த ஒருசில இடியப்பம் அவித்து விற்றல், அரிசிகுற்றி விற்றல், மா குற்றிவிற்றல் இவ்வாறான செயற்பாடுகளிலேயே ஈடுபட்டிருக்கின்றனர். ஏனைய மக்களும் விவசாயத்தில் ஈடுபட்டாலும் வேளாண்மை செய்கையும் சிலவருட காலங்களாக தொடர்ச்சியாக அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால் கடனாளிகளாகவும் உருவாகின்ற நிலையிலே இருந்து கொண்டிருக்கின்றனர். வேளாண்மைச் செய்கை வருமானமீட்டும் தொழிலற்றதாக படுவான்கரையிலே மாறிக்கொண்டிருக்கின்றது. இதனால் மாற்றுத்தொழில் இல்லாமல் தொழில்தேடி அலைகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

குடும்பத்தினை வழிக்கொண்டு செல்வதற்கு தடுமாறுகின்ற நிலை இருந்து கொண்டிருப்பது போல ஏனைய வசதிவாய்ப்புக்களும் மிகக்குறைந்தளவாகவே இருந்து கொண்டிருக்கின்றது. படுவான்கரைப்பகுதியிலே ஒருகாலப்பகுதியில் பிள்ளைப்பிரசவம் இருந்து பாம்பு கடித்தால் வரை சகலதுக்கும் நாட்டு வைத்தியங்களே வீட்டில் செய்யப்பட்டன. யுத்த காலங்களிலே பிரதேச வைத்தியசாலைகள் இருந்தன. ஆனால் மருந்து பெறுவதற்கு வைத்தியர் இல்லை, மருந்து இல்லை என்ற நிலையும் இருந்தது. இன்றும் நகர்ப்புறங்களில் உள்ள வைத்தியசாலைகள் நாளுக்கு நாள் தரத்திலும், வளத்திலும் அதிகரித்து செல்லுகின்ற நிலையிலும் படுவான்கரைப்பகுதியில் உள்ள வைத்தியசாலைகள் பிரதேச வைத்தியசாலைகளாகவே இருந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இவ்வைத்தியசாலைகளில் வைத்தியம் பெறுவதற்கென நாளாந்தம் வருகைதரும் நோயாளர்களின் எண்ணிக்கை தரத்திலே ஏ வகை வைத்தியசாலைகளுக்கு நிகரானது. ஆனாலும் மக்களும் இதுதொடர்பில் எடுத்துக்கூறியும் எந்த வைத்தியசாலையும் தரமுயர்த்தப்படவில்லை. அனைத்து அரசியல்வாதிகளும் வருகின்றனர் பார்வையிடுகையின்றனர், பார்த்து மனவேதனை அடைகின்றனர். குறிப்பாக தற்போதைய கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் மகிழடித்தீவு வைத்தியசாலையை பார்வையிட்டு இதுவேண்டுமென்று ஒதுக்கப்பட்ட வைத்தியசாலையாக இருப்பதாக எண்ணத்தோன்றுவதாகவும், இங்குள்ள நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் கூறி அந்த இடத்திலே மனவேதனைப்பட்டார். ஆனால் இன்றுவரை அவ்வைத்தியசாலை அதே நிலையில்தான் இருந்து கொண்டிருக்கின்றது.  


தபால்சேவையை பெறுவதற்கு 20கிலோ மீற்றர் செல்லவேண்டிய நிலையும், எங்கு பார்த்தாலும் அதிகளவில் கிறவல் வீதிகளும், மணல்வீதிகளும், பள்ளங்கள் நிறைந்தனவாகவுமே இருக்கின்றது. இதனால் போக்குவரத்து செய்யமுடியாத நிலையும் உள்ளது. படுவான்கரைப்பகுதியிலே இருக்கின்ற உன்னிச்சைக்குளத்தில் இருந்து எழுவான்கரைப்பகுதியில் உள்ள பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கத்தில் உள்ள மக்களுக்கும், பொதுவாக படுவான்கரை மக்களுக்கு குடிநீர் இல்லை. இதற்காக தற்போது பல கிராமங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இன்னும் குடிநீர் வழங்கப்படவில்லை. இதுபோன்று வீடு இன்மை, மலசலகூடமின்மை, வடிகான் இன்மை, கால்நடைக்கான மேய்ச்சல் தரை பிரச்சினை, யானை தாக்குதல், போசாக்கு குறைவான பிள்ளைகள் என பல்வேறு பிரச்சினைகள் இப்பிரதேசத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 500குடும்பங்கள் தங்களுடைய சொந்த நிலங்களில் குடியேறுவதற்கு காத்திருக்கின்றனர். அவற்றில் 250குடும்பங்கள் பெண்தலைமைதாங்கும் குடும்பங்கள். இவர்களது வீடுகள், இருந்த நிலங்கள் இராணுவத்தினருடனும். கடற்படையினருடனும், பொலிஸாரிடத்திலும் காணப்படுகின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 80.6ஏக்கர் காணிகள் இராணுவத்தினருடனும், 2.5ஏக்கர் காணிகள் கடற்படையினருடனும், 25.57 ஏக்கர் காணிகள் பொலிஸாரிடமும் உள்ளது. இவை மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார் இவ்விடயம் வரவேற்கதக்கதாக இருந்தாலும் அதோடு விட்டுவிடாது விடுவிப்பதற்குரிய முயற்சிகளை தொடர்ச்சியாக மெற்கொள்ள வேண்டும். அதேபோன்று பட்டிப்பளையில் ஆசிரியர் மத்திய நிலையம் தற்போதைய பொலிஸ் அரணாக இருந்து கொண்டிருக்கின்றது. தாண்டியடியில் தமிழ் உறவுகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மீது மனிதாபிமானமற்ற முறையில் விசேட அதிரடிபடையினர் அதன்மேல் இருந்து கொண்டிருக்கின்றனர். எத்தனையோ அரசகாணிகள் இருக்கின்றபோதும் இவ்வாறான இடங்களில் அரண்களை அமைத்திருப்பதானது பொருத்தமற்றது. இதுதொடர்பில் தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் பேசுவதில்லை என்றதான விமர்சனமும் மக்களிடையே இருக்கின்றது. 

பிரச்சினைகளை ஆராய்ந்து, திட்டமுன்மொழிவுகளை வழங்கி நிதிபெற்று தொழிற்சாலைகளை அமைப்பதற்கு எத்தனை மக்கள் பிரதிநிதிகள் ஆயத்தமாக இருக்கின்றார்கள்? இவைபற்றி சிந்திக்கின்றார்கள்? இதுவரை மக்கள் பிரதிநிதிகளால் படுவான்கரைப்பிரதேசத்தில் எத்தனை தொழிற்சாலைகள் நிறுவப்பட்டிருக்கின்றது? தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது? என்றால் அவை பூச்சியமே தமக்கு வரவு செலவுத்திட்டமூலமாக ஒதுக்கப்படுகின்ற நிதியை தமக்கு ஆதரவான பிரதேசங்களுக்கு பகிர்ந்தளித்து, நிகழ்வுகளில் கலந்து கொண்டு வரவேற்பு பெறுவதில் செலுத்தும் அக்கறை  பல அரசியல்வாதிகளிடம் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்த எவ்வாறான திட்டங்களை அமுல்படுத்த முடியும். ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் ஒவ்வொரு துறையை எடுத்து அத்துறை ஊடாக மக்களை வளர்ப்பதற்கு எல்லோரும் கலந்து ஆலோசித்து தீர்மானித்தால் கூட பல அபிவிருத்திகளையும் செய்துவிட முடியும். மாவட்டத்தில் இருக்கின்ற மின்குமிழை எரிய வைப்பதற்குகூட அதிகாரம் இல்லாத மக்கள் பிரதிநிதிகளாகதான் மட்டக்களப்பு அரசியல்வாதிகளின் நிலை இருந்து கொண்டிருக்கின்றதா? என்ற சந்தேகமும் இருக்கின்றது. ஏனெனில் மண்முனை பாலத்தின் மீது அமைந்துள்ள மின்குமிழ் எரியாமல் ஒருவருடத்திற்கு மேலாக இருந்து கொண்டிருப்பதுடன், இதுபற்றி மக்கள் பல தடவை கூறியும் இதுவரை நடந்தேறவில்லை. இணைப்புக்குழு கூட்டங்கள் கூட்டப்படுவது மட்டுதான்? அதற்கு பிறகு வேறொன்றுமில்லை. மாவட்டத்தில் விவசாய அமைச்சும் தமிழினத்தினை சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் புதிதாக படுவான்கரைப்பகுதியில் எத்தனை பண்ணைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்றால் அதுவும் இல்லை. ஒட்டுமொத்ததில் கதைப்பது மட்டும்தான் மட்டக்களப்பின் அரசியல்போல் இருப்பதாக மக்கள் விமர்சிக்கின்றனர். அதேபோன்று செய்தி வாசிப்பது போன்று துண்டுகளில் எழுதி வைத்து மக்கள் பிரச்சினைகளை வாசிக்கின்றவர்களாகவும் ஒருசிலர் இருக்கின்றனர். என்ன நோக்கத்திற்காக அவர்கள் எழுதிவைத்து வாசிக்கின்றார்கள் என்று தெரியாது? ஆனால் மக்களோடு மக்களாக அரசியல்வாதிகள் இல்லை. அவ்வாறு இருந்தால் மக்கள் பிரச்சினைகள் தம்மனப்பதிவுகளிலே இருந்து வெளியாகும் என்ற விமர்சனமும் மக்களிடமிருந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறான விமர்சனங்களை வெல்வதற்கு மக்களோடு மக்களாக நின்று மக்கள் மனங்களில் நீடித்து நிலைத்து நிற்க கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டும்.