ஆலையடிவேம்பில் துவிச்சக்கரவண்டிகளும் மூக்குக்கண்ணாடிகளும் வழங்கிவைப்பு

வாழ்வின் எழுச்சி சமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சின்னப்பனங்காடு, புளியம்பத்தைக் கிராமத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்குத் துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் வைபவமும், அக்கரைப்பற்று - 7/3 கிராமசேவகர் பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட கட்புலன் குறைந்த இரு முதியவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் வைபவமும் இன்று (28) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலக திவிநெகும தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவங்களை வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவின் சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.தெய்வேந்திரன் ஏற்பாடு செய்திருந்ததுடன், உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவின் தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, மகா சங்கப் பணிப்பாளர் திருமதி. அருந்ததி மகேஸ்வரன், கருத்திட்ட முகாமையாளர் எம்.கண்ணதாசன் உட்பட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன், புளியம்பத்தைக் கிராமத்திலிருந்து சாகாம வீதியூடாக தினமும் 10 கிலோமீட்டர்கள் பனங்காடு கிராமத்துக்கு நடந்துசென்று பாடசாலைக் கல்வியைக் கற்றுவந்த மாணவர்களே இத்திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டு துவிச்சக்கரவண்டிகளை வழங்கிவைத்ததாகக் குறிப்பிட்டதுடன், இதற்கு முன்னரும் பல தடவைகளில் இவர்களைப்போல் அக்கிராமத்திலுள்ள ஏனைய பல மாணவர்களுக்கும் அரசுசாரா அமைப்புக்களின் நிதியுதவியுடன் இலவச துவிச்சக்கரவண்டிகளை வழங்கிவைத்ததாகவும் தெரிவித்தார்.