ஆலையடிவேம்பு
பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களது பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் அபிவிருத்தி
என்பன தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்புக்குழுவின் இவ்வருடத்துக்கான இரண்டாவது
உத்தியோகபூர்வக் கலந்துரையாடல் இன்று (15) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஏற்பாடு
செய்யப்பட்டு, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற
இக்கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், திருக்கோவில் வலயக்
கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தர்மபாலன், பிரதேச சிறுவர் நன்னடத்தை
உத்தியோகத்தர் கே.ஜெயதாஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின்
பொறுப்பதிகாரி, பிரதேச வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச
செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள், பிரதேச அரசசார்பற்ற
நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இயங்கிவருகின்ற
அம்மன், களம், மகாசக்தி பாலர் பாடசாலைகளின் முகாமைத்துவ சபைகளின் உறுப்பினர்கள் ஆகியோர்
கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிகமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுவரும் விடயங்களான
முன்பள்ளிகளில் எழுத்துக்களைப் போதிக்கும் கல்வி முறையைத் தடுத்து அறிவுத்திறனை
வளர்க்கும் விளையாட்டுக்களை முதன்மைப்படுத்தும் போதனை முறையை வழக்கத்துக்குக்
கொண்டுவரல், முன்னனுமதி பெறப்படாத சிறுவர்களுக்கான பகல்நேரப் பராமரிப்பு
மையங்களைப் பதிவுசெய்தல், சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ்
நிலையப் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் உத்தியோகத்தர்களின் உதவியுடன்
குற்றவாளிகளைச் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தல் போன்ற பல விடயங்கள் அறிக்கையிடப்பட்டதுடன், பிரதேச
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உதவியுடன் 5 வயதுக்குக்
குறைந்த சிறுவர்களின் தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்வதைத்
தடுத்துநிறுத்தும் வேலைத்திட்டங்களைக் கிரமமாக முன்னெடுத்தல் போன்றன தொடர்பான
தீர்மானங்கள் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்டன.
அத்துடன் அரச
காணிகளில் அமையப்பெற்ற முன்பள்ளிகளில் திருத்தங்கள் எவையும் மேற்கொள்ளப்படும்
சந்தர்ப்பங்களில் பிரதேச செயலாளரின் முன்னனுமதி பெறப்பட வேண்டும் மற்றும் பாலர்
பாடசாலை சார்ந்த வைபவங்களை ஒழுங்கு செய்வதில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள்
என்பவற்றுடன் முன்பள்ளிகளின் பாடவிதானங்கள் அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொதுவான
ஒன்றாகப் பின்பற்றுவற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் ஒவ்வொரு
பாலர் பாடசாலைகளிலும் சரியான கால அட்டவணை கடைப்பிடிக்கப்படவேண்டும், அறவிடப்படும் அனுமதிக்
கட்டணம், மாதாந்தக் கட்டணம் ஆகியன தொடர்பில் பொதுவான ஒரு அறவீட்டு முறையைப்
பின்பற்றுவது தொடர்பாகப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. பாலர் பாடசாலைகளை வார நாட்களில்
மூடுவது சம்மந்தமாக இக்குழுவின் முன்னனுமதி பெறப்படவேண்டும், ஆலையடிவேம்பு பிரதேச முன்பிள்ளைப்பராய
அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக் குழு அங்கத்தவர்களில்
முன்பள்ளிகளுக்கான களப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களின் கடமைகள்
தொடர்பான பட்டியலை முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் முகாமையாளர்களுக்கும் கையளிப்பது
தொடர்பாகவும் அங்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.























