ஆலையடிவேம்பு
பிரதேசத்தில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும்
சிறுகைத்தொழில் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் நோக்கோடு அங்குரார்ப்பணம்
செய்துவைக்கப்பட்டுள்ள அகரம் வர்த்தகர் சங்கத்தின் அலுவலக நடவடிக்கைகளுக்குத்
தேவையான உபகரணங்கள் மற்றும் காகிதாதிகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (30) காலை
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலக திவிநெகும தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அகரம்
வர்த்தகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது அலுவலகத்துக்கான ஒருதொகைப்
பிளாஸ்ற்றிக் கதிரைகள், அலுமாரி, காகிதாதிகள் என்பவற்றைப் பிரதேச
செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
அங்கு
கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன், அண்மையில் அங்குரார்ப்பணம்
செய்துவைக்கப்பட்ட குறித்த வர்த்தகர் சங்கமானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது
செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்ததுடன், தற்போது தற்காலிகமாகப் பிரதேச செயலக
திவிநெகும தலைமைக் காரியாலயத்தில் இயங்கிவரும் இச்சங்கத்தின் செயற்பாடுகள் அடுத்த
மாதம் முதல் கிராம மட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள புதிய அலுவலகமொன்றில் தமது கடமைகளை
முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில்
பிரதேச செயலாளருடன் திவிநெகும தலைமைக் காரியாலய முகாமையாளர் கே.நேசராஜா,
கருத்திட்ட முகாமையாளர் எம்.கண்ணதாசன் மற்றும் மகா சங்கப் பணிப்பாளர் திருமதி.
அருந்ததி மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.












