வாழைச்சேனை சமுர்த்தி வங்கியினால் முத்திரை கொடுப்பணவு உரியமுறையில் வழங்கப்படுவதில்லை என பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்

(வாழைச்சேனை நிருபர்)

மட்டக்களப்பு வாழைச்சேனை சமுர்த்தி வங்கியினால் வறிய மக்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி முத்திரை கொடுப்பணவு உரியமுறையில் வழங்கப்படுவதில்லை என பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில் தாங்கள் தினம் தோறும் குறித்த வங்கியில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதற்காக தாங்கள் அதிகாலை 3.30 மணி தொடக்கம் அலுவலகம் திறக்கப்படும் நேரம் வரை காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காத்திருந்த போதும் இறுதியில் 50 பேருக்கு மாத்திரமே பணப்பற்றுச் சீட்டு இலக்கமிட்டு வழங்கப்படுகிறது.

ஏனையோர்களுக்கு வழங்கப்படுவதில்லை.பற்றுச் சீட்டு பெறுவதற்காக நிரையில் முன் நிற்ப்பவர்களுக்கே முதலில் பணப்பற்றுச் சீட்டு வங்கி உத்தியோகஸ்த்தர்களால் வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த பற்றுச் சீட்டு வழங்கும் நடைமுறையில் கையூட்டல் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களினால் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சிபார்சு நடைமுறையும்   இடம்பெறுவதாக தெரிவிக்கின்றனர்.

தாங்கள் மழை குளிர்  என்று பாராமல் இரவு வேளையில் பல தூரங்களில் இருந்து கால்நடையாக சமுர்த்தி வங்கிக்கு வந்து மெழுகுவர்த்தி கொழுத்தி காத்திருப்பதாகவும் இறுதியில் பலனின்றி வீடு திரும்புவது வேதனையளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

மாதாந்தம் வழங்கப்படும் பணத்தினை பெற்றே தங்களது அன்றைய நாள் உணவு மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளை மேற்கொண்டு வருவதாகவும் கடந்த 6மாதா காலமாக மேற்குறித்த நிர்வாக செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக மாவட்ட பணிப்பாளரிடம் நேரடியாக மக்கள் கடந்த வியாழக்கிழமை(15)முறைப்பாடு தெரிவித்தும் இது வரைக்கும் பலன் ஏதும் கிடைக்கவில்லையென தெரிவிக்கின்றனர்.

சமுர்த்தி சுற்று நிருபத்தின்படி வங்கிக்கு வரும் பயனாளிகளை திருப்பி அனுப்பக் கூடாது என்றும் மாவட்டத்திலுள்ள வேறு சமுர்த்தி வங்கிகளில் குறைந்தது 300 பேருக்கு பணம் வழங்கப்படுகிறது. ஆனால் வாழைச்சேனை சமுர்த்தி வங்கியில் மாத்திரம் இந்த நடைமுறை ஏன் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.