2017 இல் ஆட்சிக் கவிழ்ப்பு

2017ஆம் ஆண்டுக்குள் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது இலக்கு என முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றபோதும், அரசியல் நிலவரத்தின் அடிப்படையில் அவை மாறுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்றையதினம் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும், சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ள நிலையில், அரசாங்கத்தால் தொடர்ந்தும் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக இருக்க முடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நீங்கள் எவ்வாறு மீண்டும் நாட்டின் தலைவராக முடியும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், 'எனக்கு மீண்டும் நாட்டின் தலைவராக வரும் நோக்கம் இல்லை' என்றார். நாட்டின் தலைவராக இல்லாவிட்டாலும் நாட்டை ஆட்சிசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அப்படியாயின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பிரதமராக பணியாற்றுவீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற முடியுமாயின். 1970ஆம் ஆண்டு முதல் நன்கு பரீட்சையமான ஒருவருடன் இணைந்து வேலைசெய்ய தன்னால் முடியும் என்றார். அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்படுமாயின் தனக்கு அவசியமான நிபந்தனையின் அடிப்படையிலேயே இணைந்து செயற்படுவேன் என்றும் கூறினார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதானது சுதந்திரக் கட்சிக்கான வாக்குகளைப் பிளவுபடுத்துவதுடன், ஐக்கிய தேசியக் கட்சி வெல்வதற்கான சந்தர்ப்பத்தை அது ஏற்படுத்திவிடும் என ஊடகங்களில் கூறப்படும் கருத்துக்களை தான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், அரசாங்கத்தின் செயற்பாட்டினால் அதிருப்தியடைந்திருக்கும் ஐ.தே.க ஆதரவாளர்கள் அக்கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

புதிய அரசியலப்பு தொடர்பில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அரசியலமைப்பை எவ்வாறு தயாரிப்பது என்பது மாத்திரமே கலந்துரையாடப்பட்டது. இதனைத்தவிர வேறு விடயங்கள் அங்கு கலந்துரையாடப்படவில்லையென்றார். புதிய அரசியலமைப்புக் குறித்த நிலைப்பாட்டைக் கூறுவதாயின், அது தொடர்பில் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்ட பின்னராகும். இருந்தபோதும் அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

சீன முதலீடுகள்

சீன முதலீடுகளுக்காக 15000 ஏக்கர் நிலப்பரப்பை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துடன் தான் ஒருபோதும் இணங்கப்போவதில்லையென்று குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்துக்கு எடுத்துக் கூறியதுடன், தமது ஆட்சிக் காலத்தில் சீன பொருளாதார வலயத்துக்கு 750 ஏக்கர் நிலப்பரப்பை பெற்றுக் கொடுப்பதற்கே தீர்மானித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

தமது ஆட்சிக் காலத்தில் கொழும்பு நகரத் திட்டத்துக்காக சீன முதலீடுகள் கொண்டுவரப்பட்டபோது கொழும்பிலுள்ள சீன உயர் ஸ்தானிகராலயத் தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனினும், இவர்கள் தற்பொழுது 'எலி' போல மௌனமாக இருக்கின்றனர். எமது ஆட்சிக் காலத்தில் நேரடியாக தமது எதிர்ப்பை தெரிவித்த இந்தியா, தற்பொழுது மௌனமாக இருப்பதற்கு திருகோணமலை துறைமுகம் அவர்களுக்கு வழங்கப்படப்போகின்றது என்பதற்காக இருக்கலாம்.