தனது செய்திகள் இருட்டடிப்பு செய்ததாக கூறி ஊடகவியலாளர்களுக்கு எதிராக அம்பிட்டிய தேரர் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகம்

மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு முன்னாள் நேற்று (3) சனிக்கிழமை மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய தேரர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருந்த போது அந்த இடத்தில் செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் நூர்தீன் அவர்களை  அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அழைத்து மிகவும் கடுமையாக வார்த்தைப் பிரயோககத்தில்  பேசியுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராமய தேரரின் செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்படுவதாகவும் ஒரு பக்க சார்பாகவே தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாகவும் அவ்விடத்தில் தெரிவித்த தேரர் மட்டக்களப்பிலுள்ள தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்களை மிகவும் மோசமாக ஏசினார்.
தனது தரப்பு செய்திகள் வெளி வருவதில்லை எனவும் செய்தி இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும் கூறிய தேரர் தூசன வார்த்தைகளை கொண்டும் அவ்விடத்தில் ஏசினார்.

குறித்த ஊடகவியலாளர் தனது நிலைப்பாட்டையும்  செய்திகள் உண்மைத்தன்மையுடன் வெளிவருகின்றன எனும் விடயங்களை அவ்விடத்தில் தெரிவித்த போதிலும் அதை உள் வாங்கிக் கொள்ளாமல் தேரர் ஏசிப் பேசியதுடன் தேரரும் அவ்விடத்தில் நின்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரும் தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு கிண்டலாக கூய்  போட்டு கூச்சலிட்டார் .

இதன் போது அங்கு பொலிசார் மற்றும் தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிங்கள பொது மக்கள் என பலரும் நின்றனர்

எனினும் அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர் அவ்விடத்தை விட்டு நகர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.