நில அளவை புல உதவியாளர் பயிற்சிக்கு 125 தமிழ் மொழி மூல விண்ணப்பதாரிகள் தெரிவு

( -ஏ.எச்.ஏ. ஹுஸைன்  )

இலங்கை நில அளவைத் திணைக்களத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மொழி மூல பயிலுநர்களுக்காக நில அளவை புல உதவியாளர் பயிற்சிப் பாடநெறி திங்கட்கிழமை (09.01.2017) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய தொழிற் தகைமை மட்டம் (NVQ) 3,4 இற்கான இந்தப் பயிற்சி நெறியில் மட்டக்களப்பு, அம்பாறை திருகோணமலை மாவட்டங்கள் உட்பட வடக்கு மற்றும் தென்னிலங்கையிலிருந்து  தமிழ் மொழி மூல பயிலுநர்கள் மொத்தம் 125  பேர் தெரிவாகியுள்ளனர்.

நில அளவை புல உதவியாளர் தொழில்சார் சான்றிதழ் மற்றும் பாடவிதானத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறி தியத்தலாவ நில அளவையியல் படமாக்கல் நிறுவனத்தில் (Institute of Surveying and Mapping) திங்கள் (09.01.2017) தொடக்கம் 12 வார காலத்திற்கு உட்கள மற்றும் வெளிக்கள பயிற்சியாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது கட்டத்தில் உட்களப் பயிற்சிகள் 09.01.2017-ஆரம்பித்து 20.012017 அன்றைய தினம் முடிவடைகிறது.
இரண்டாவது கட்ட 10 வார கால வெளிக்களப் பயிற்சி 23.01.2017 இல் ஆரம்பித்து 31.03.2017 அன்றை தினம் முடிவடைகின்றது.

இப்பயிற்சிக் காலம் முடிவடைந்த பின்னர் பயிற்சியை நிறைவு செய்தவர்களின் திறமையினை மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் அதிகாரிகளினால் பரீட்சிக்கபப்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நில அளவையாளர் நாயக அலுவலகத்தில் இடம்பெறும் எழுத்து மற்றும் நடைமுறை இறுதி மதிப்பீட்டுப் பரீட்சையில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாத்திரம் அவர்களது அறிவு மட்டத்திற்கு ஏற்ப தேசிய தொழிற் தகைமை மட்ட சான்றிதழை இலங்கை நில அளவைத் திணைக்களம் மற்றும் மூன்றாம் நிலைத் தொழிற் கல்வி ஆணைக்குழு ஆகியன இணைந்து வழங்கும் என்று இலங்கை நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது.