விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மத்திய வலய விவசாய பிரிவினால் நல்லாட்சி அரசின் இரண்டு வருட நிறைவு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக்  குடியரசின் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லாட்சி அரசு உருவாக்கி இரண்டாண்டு நிறைவினை முன்னிட்டு விவசாயத் திணைக்களத்தின், மட்டக்களப்பு  மத்திய விவசாய அலுவலகத்தின் கீழுள்ள, கல்லடி கமநல கேந்திர நிலைய பிரிவின் நிகழ்வுகள் மட்டக்களப்பு,புன்னைச்சோலை  கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை 08ஆம் திகதி இடம்பெற்றது.

விவசாயப் போதனாசிரியர் திருமதி. மதுமிதா டினேஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு உதவி விவாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது, நல்லாட்சி சிறப்புடன் தொடரவேண்டுமென அனைவராலும் பிரார்த்தனைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வருகைதந்த மக்கள் மத்தியில் மட்டக்களப்பு உதவி விவாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா உரையாற்றினார்.

அங்கு அவர் பேசுகையில், விவசாயிகளுக்கு அரசாங்கம் பலவகையிலும் பெருமளவு உதவிகளை செய்துகொண்டிருக்கின்றது. அதை பயன்பெறுவோர் திட்டமிட்டு சிறந்தமுறையில் பயன்படுத்தி தமது குடும்ப வருமானத்தை உயர்த்தவேண்டும்.

இங்கு பெரும்பாலான பிரதேசங்களில் விவசாயத்திற்கான நீர் தாராளமாக கிடைக்கின்றது. தாராளமாக கிடைக்கின்றது என்பதற்காக அந் நீரை வீண்விரையமாக்கக் கூடாது. நீரின் பெறுமதியை விளங்கிக்கொண்டு நீரை சிக்கனமாக பாவிக்க வேண்டும். அதற்கேற்றாற்போல் விவசாயத்தையும் பயிர்வகைகளையும் தெரிவுசெய்து செய்கைபண்ண வேண்டும். எனத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் தலைமையக விவசாய போதனாசிரியர் எம்.ஜமால்டீன், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வருகைதந்த கிராம மக்களுக்கு பழமரக் கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது.