மலர்ந்துள்ள
2017 ஆங்கிலப் புதுவருடத்தின் முதலாவது வேலைநாளில் அலுவலகக் கடமைகளை
உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் சிறப்பு வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச
செயலகத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் இன்று (02) காலை இடம்பெற்றது.
இலங்கை
ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வறுமை
ஒழிப்பு ஆண்டாக இவ்வருடம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசாங்க நிருவாக
மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியால் வெளியிடப்பட்ட 27/2016
ஆம் இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைக்கமைவாக இன்றைய கடமைகளை ஆரம்பிக்கும்
நிகழ்வானது நடாத்தப்பட்டது.
முதலில் பிரதேச
செயலாளரால் தேசியக்கொடியேற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அடுத்து நாட்டுக்காக
உயிர்நீத்த தேசிய வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,
அனைத்து உத்தியோகத்தர்களும் ஒருமித்த குரலில் அரசாங்க சேவையின் சத்தியப் பிரமாணம்
எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனைக்கமைய எமது
இலங்கைத் திருநாட்டை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் குறிக்கோளோடு
முன்னெடுக்கப்படவுள்ள உயர்ந்த வேலைத்திட்டங்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலக
உத்தியோகத்தர்களால் வழங்கப்படவேண்டிய அர்ப்பணிப்பு மிக்க நேர்மையான சேவைகளின்
அவசியம் குறித்து பிரதேச செயலாளர் அங்கு உரையாற்றியிருந்தார். அவரைத் தொடர்ந்து இடமாற்றம்
பெற்றுவந்து இன்று முதல் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் தமது கடமைகளைப் புதிதாக
ஆரம்பிக்கவுள்ள உத்தியோகத்தர்கள் தங்களைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டனர்.
இறுதியாக
பிரதேச செயலக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான
அலுவலகத்தைத் திறந்துவைத்த பிரதேச செயலாளர் அதன் திறப்புக்களை பிரதேச செயலக இரவுநேரக்
காவலாளியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்திருந்தார்.












