(படுவான் பாலகன்) கல்விப்பொதுத்தராத உயர்தரப்பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயம் கணிதப்பிரிவில் சாதனை படைத்துள்ளது.
குறித்த பாடசாலையில் இருந்து கணிதப்பிரிவில் தோற்றிய கே.மீனோத்குமார் என்ற மாணவன் A,B,C சித்தியுடன் மாவட்டத்தில் 26வது நிலையை பெற்று பாடசாலைக்கும் படுவான்கரைப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளான்.
மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் புதிதாக உயர்தர கணித, விஞ்ஞானப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்கள் பரீட்சைக்கு தோற்றி மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற்றிருந்தனர். மூன்றாவது வருட மாணவர்களாக 2016ம் ஆண்டு உயர்தரத்தின் கணித விஞ்ஞான பிரிவில் தோற்றியிருந்த மாணவர்களில் ஒரே தடவையில் உயர்தரத்தில் தோற்றி குறித்த மாணவன் சித்தி பெற்று மாவட்டத்தில் 26வது இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று இப்பாடசாலையில் கணித பிரிவில் தோற்றியிருந்த இன்னும் இரு மாணவர்கள் 116 மற்றும் 125வது மாவட்ட நிலையையும் பெற்றுள்ளனர். விஞ்ஞானப்பிரிவிலும் இதுபோன்று மூன்று பாடங்களிலும் மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். கலைப்பிரிவில் 131வது மற்றும் 190வது மாவட்ட நிலையை இரு மாணவர்களும், வர்த்தகப்பிரிவில் 116வது மற்றும் 170வது மாவட்ட நிலைகளையும் இரு மாணவர்கள் பெற்றுள்ளனர்.
மண்முனை தென்மேற்கு கோட்டப்பாடசாலைகள் பின்தங்கிய பிரதேசமாகவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வளர்ச்சியடைந்து வருகின்ற கிராமமாகவும், பிரத்தியேக வகுப்புக்கள் மிகவும் குறைந்தளவிலே இருக்கின்ற நிலையிலும் இப்பிரதேசத்து மாணவர்கள் குறித்த கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளிலே கல்வி கற்று சித்திபெற்றுள்ளமை மிகவும் பாரட்டதக்கதாகும்.












