வறட்சி, மற்றும் வெள்ளம் போன்ற பேரழிவால் அடிக்கடி பாதிக்கப்படும் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதியில் சுமார் ஒரு இலட்சம் பேருக்கு சுத்தமான குடிநீரை வழங்கி அவர்களை சிறு நீரக நோயிலிருந்து காப்பதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியளித்து திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யூ.எஸ்.எயிட் நிறுவனம் அறிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வறட்சி, மற்றும் வெள்ளத்தினால் அடிக்கடி பாதிக்கப்படும் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதிக்கு குடிநீரை வழங்கும் வகையில் USAID அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் ஓரு விஸ்தரிப்பாகவே இந்த திட்டம் அமைந்துள்ளதாகவும் யூஎஸ்எயிட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (10.01.2017) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், மழைநீரை சேகரிப்பதற்கான தொட்டிகளை அமைத்தல், குழாய் மூலம் குடிநீரை பெறுவதற்கான வசதிகளை வழங்குதல், வெள்ளம் மற்றும் வறட்சியினால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வதற்காக உள்ளுர் உட்கட்டமைப்புகளை சீர்திருத்தம் செய்தல் போன்ற திட்டங்களும் அடங்கியுள்ளன.
இலங்கையின் முக்கிய சுகாதாரப் பிரச்சினைகளை அடையாளப்படுத்தும் ஜனாதிபதி சிறிசேன மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில நாட்டில் அதிகரித்து வரும் கடும் சவாலாக காணப்படும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைப்பதற்கான இடங்களை தெரிவுசெய்வதற்கு இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும்.
இதற்கு மேலதிக இந்த திட்டம் இவ்வாறான இடர்களை குறைப்பதற்கான தேசிய மற்றும் பிராந்திய கொள்கைகளிற்கு ஆதரவு வழங்கும்.
அதேவேளை பேரழிவுடன் தொடர்புபட்ட நீர் மற்றும் சுகாதார தேவைகளுக்குமாக நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கு உள்ளுர் சமூகங்களிற்கு இந்தத் திட்டம் உதவும்.
இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ளுர் அமைப்பான லங்கா ரெயின்வோட்டர் ஹார்வெஸ்டிங் போரமும், கிழக்கில் பாம் பவுண்டேஷன் நிறுவனம் சமூகங்களிற்கு குழாய் நீர், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், மற்றும் உள்ளுர் பயிற்சிகளை வழங்கும்.
'நாளாந்தம் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள இலங்கையின் குடும்பங்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த சுத்தமான குடிநீரை வழங்குவது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது' என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
















