நமது வளங்களை சரியாக பயன்படுத்தினால் வெளிநாட்டு தொழிலுக்கு செல்லவேண்டிய தேவையில்லை - மட்டு.அரசாங்க அதிபர்

கடந்த வருடத்திலே கிழக்கு மாகாணத்திலிருந்து சுமார் 14 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் மத்தியகிழக்கிற்கு தொழிலைத்தேடி சென்றிருக்கின்றார்கள். இந்த வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் மனித வளங்கள் உட்பட அத்தனை வளங்களும் நிறைந்த மாவட்டமாக எமது மாவட்டம் இருக்கின்றது. என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை கிராமத்தில் வியாழக்கிழமை (9ஆம் திகதி )  நாச்சியார் பாரம்பரிய உணவக திறப்புவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையிலே அலர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,
இந்த வளங்களை நாங்கள் சரியாக பயன்படுத்தினால் இதைவிட்டு விமானங்களிலும் படகுகளிலும் வௌிநாட்டிற்கு தொழில்தேடி மிகக் குறைந்த வருமானத்திற்காக செல்லவேண்டிய தேவையொன்று இல்லை.

எனவேதான் குறைந்த வருமானம்பொறும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், பெண்களை நம்பியிருக்கும் குடும்பங்களை மீண்டும் அவர்களது பொருளாதாரத்தை மேலோங்கச்செய்வதற்காகத்தான் இவ்வாறான சுயதொழில் திட்டங்களை காவியா நிறுவனத்தினர் இம் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் முன்னெடுத்து வருகின்றனர்.

பொதுவாக இந்த பாரம்பரிய உணவு என்கின்ற விடயம் புதிதாக ஒரு திறமையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை.  பொதுவாக தமிழ் பிரதேசங்களிலே இருக்கின்ற சமயலை நன்கு தெரிந்தவர்கள் தங்களது பாரம்பரிய உணவுகளை நன்றாக தயாரிக்கத் தெரிந்தவர்கள். இன்று உடலுக்கு பொருத்தமற்ற உணவுகளாலே மனிதன் இரத்த அழுத்தம், சக்கரை நோய் என்று பல்வேறு நோய்கள் உருவாகின்றது.  நாங்கள் இந்த பாரம்பரிய உணவுகள் உடலுக்கு ஏற்றவகையில் சுகாதாரத்துடன் தயாரிக்கப்படுவதனால் அவற்றை ஊக்குவிப்பதற்காகத்தான் நாச்சியார் உணவகம் பல இடங்களிலும் முன்னோடியாக செய்து வருகின்றது.

இங்கே சாதாரணமாக விளைகின்ற பொருட்களுக்கு வெளிநாடுகளில் பாரிய கிராக்கி இருக்கின்றது. ஆனால் அப் பொருட்களுக்கு நம்மவர் மத்தியில் மதிப்பற்ற நிலைதான் காணப்படுகின்றது. இங்கு இருக்கின்ற மிக பெறுமதியற்ற பொருட்களுக்கு வெளிநாடுகளில் பெறுமதி தரப்படுகின்றது. எனவே நமது பிரதேசத்தில் இலகுவில் பெறக்கூடிய பொருட்களை நாங்கள் உட்கொள்வதற்கும் அதனை விற்பனை செய்வதற்கும் நாங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.