-ஏ.எச்.ஏ. ஹுஸைன்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டையும் ஓவியமாக வரைந்து ஜனாதிபதியிடம் கையளித்த கலைஞருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓவியக் கலைஞரான வாழைச்சேனை, மாவடிச்சேனையைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மத் சமீம் (வயது 32) என்பவர் புதன்கிழமை 01.02.2017 ஏறாவூருக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம், ஜனாதிபதியினதும் கிழக்கு முதலமைச்சரினதும் ஓவியத்தை அருகருகே இருக்கும் ஒப்பனைக் காட்சியாக வரைந்து நேரடியாக ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் வீடியோ ஒளிப்பதிவாளராகவும் படப்பிடிப்பாளராகவும் பணிரியும் சமீம் புதன்கிழமை மாலை வீடு சென்றதும் குறித்த அச்சுறுத்தல் கடிதம் வீட்டில் போடப்பட்டிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த அச்சுறுத்தல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,'நீ வரைந்த ஓவியத்தை எப்படிக் கையளிக்கப் போகின்றாய் என்பதைப் பார்ப்போம், ஜனாதிபதி ஏறாவூருக்கு வரமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அடேய் பைத்தியக்காரா இதுவெல்லாம் ஒரு பிழைப்பா? மாகாண சபை கலைந்தால் நீ தெருவில் நிற்பாய், வெளியூரானுக்கு ஓவியம் வரையும் நீ ஒரு நாள் மாட்டுவாய்!' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தையும் முறைப்பாட்டையும் பெற்றுக் கொண்ட பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
குறித்த இருவரினதும் ஒப்பனை ஓவியங்களை தான் இரண்டரை மணித்தியாலங்களில் வரைந்து முடித்ததாக சமீம் தெரிவித்தார்.













