(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்றுமுதல்(21) மேற்கொண்டுள்ள சத்தியாகிரக போராட்டத்தில், அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை நியாயமானது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.
வேலையற்ற பட்டதாரிகளினால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பு மேற்கொள்ளப்படும் தீர்வு கிடைக்கும் வரையான சத்தியாகிரக போராட்டம் தொடர்பில் மாகாணசபை எவ்வாறான தீர்மானத்தினை எடுக்கவுள்ளது என்பது தொடர்பில் வினாவியபோதே இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2016ம் ஆண்டு வரை 1700க்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்று உள்ளனர். இவர்கள் யுத்தகாலத்திலும், பல பொருளாதார கஸ்டங்களுக்கு மத்தியிலும், வறுமைக்கு மத்தியிலும் தங்களது பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர்கள். இவர்களுக்கு மத்திய, மாகாண அரசு நியமனங்கள் வழங்காமல் இருப்பது வேதனையே. அதேவேளை இவர்களுக்கான சரியான திட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதையும் கண்டிக்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு 1135பேர் வெற்றிடமாக இருந்த நிலையில், 650பேருக்கான நியமனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. அதேபோல தமிழ், குடியியல், இரண்டாம்மொழி சிங்களம், தகவல்தொடல்பாடல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களுக்கு 335பேர் வெற்றிடமாகவிருந்தபோதிலும் 222பேருக்கே நியமனம் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய 113பேருக்கான வெற்றிடம் இன்னும் உள்ளது. இவ்வெற்றிடங்களுக்கு ஒருவிசேடமான திட்;டத்தை நாளைக்கு(22) கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. இதன்மூலமாக 750க்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கமுடியும் என நம்புகிறேன்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள 5500பேருக்கு மேற்பட்ட பட்டதாரிகளில், அவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்ட பின்பு, இன்னும் மீதியாக 4500க்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்று இருக்கப்போகின்றார்கள். இதற்கு கிழக்கு மாகாணசபை என்ன செய்யப்போகின்றது என்பதற்கான திட்டத்தை முன்வைக்க வேண்டும். என்று கூறிக்கொண்டிருக்கின்றோம். இதேவேளை கிழக்கு மாகாணசபைக்கு வருமானம் இல்லாத காரணத்தினால், மத்திய அரசின் கையை நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள மீதி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு 31.03.2012ம் ஆண்டு நியமனம் வழங்கியது போன்று பயிற்சி அடிப்படையில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டதாரிகளில் விசேட தேவையுடையவர்களையும், 40 – 42வயதினை கடந்தவர்களையும் முன்னிலைப்படுத்துவதுடன், பட்டம் பெற்று வெளியேறிய ஆண்டு மூர்ப்பு அடிப்படையிலும் நியமன வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என்பதையும் கூறிவருகின்றோம். என்றார்.












