வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முன்பள்ளிகளுக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.கங்காதரன், கணக்காளர் செல்வி.கே.தர்மினி, வாகரை பிரதேச சபை செயலாளர் சி.இந்திரகுமார் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் 2016ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இதில் வாகரைப் பிரதேசத்தில் மிகவும் கஷ்ட நிலைமையில் இயங்கும் பூங்காவனம் முன்பள்ளி, நந்தவனம் முன்பள்ளி, கலைமகள் முன்பள்ளி ஆகிய முன்பள்ளிகளுக்கு உபகரணம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












