(படுவான் பாலகன்) கல்வியை தெலைத்துவிட்டு போராட்டத்திற்கு சென்ற நாங்கள் இன்று அரசியலில் இருக்கின்றோம். நாங்கள்விட்ட கல்வியை எமது குழந்தைகள் விட்டுவிடக்கூடாது என்பதற்காக, அரசியல்வேறுபாடுகளுக்கு அப்பால் எமது பிரதேசம் என்ற ரீதியில் கல்விக்காக சேவையாற்றுகின்றோம். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் குறிப்பிட்டார்.
அம்பிளாந்துறை பாலர் பாடசாலையில் இன்று(05) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
ஒரு காலத்தில் தமிழ் மக்கள் கல்வி அறிவுள்ளவர்களாக, திணைக்கள தலைவர்களாக இருந்தோம். கடந்த காலத்தில் கல்வியில் பின்தங்கியிருக்கின்றோம், அதற்கு கடந்த காலங்களிலே நடைபெற்ற போராட்டமும் காரணமாகவிருக்கலாம். அதுமாத்திரமின்றி படுவான்கரைப்பிரதேசத்திலே உள்ள பாடசாலைகளிலே கணித, ஆங்கில, விஞ்ஞான ஆசிரியர்களுக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
எழுவான்கரை என்று கூறப்படும், பிரதேசங்களிலே நிறைந்திருக்கும் ஆசிரியர்கள் படுவான்கரை பிரதேசத்திற்கு வருவதற்கு விரும்புவதில்லை. எங்களது குழந்தைகளை எதிர்வரும் காலங்களில் கலைத்துறை பட்டதாரிகளாக உருவாக்காமல், விஞ்ஞான துறையிலேயே பட்டதாரிகளாக்க வேண்டும். கலைப்பட்டதாரிகள் கடந்த நான்கு ஐந்து வருடங்களாக பட்டங்களை பெற்றுவிட்டு தொழிலின்றி இருக்கும் நிலைமைதான் இந்த நாட்டிலே இருக்கின்றது. கணித, விஞ்ஞான பாடங்களுக்குரிய பட்டதாரிகள் எமது பிரதேசங்களிலே இல்லை. அதனை உருவாக்க அனைவரும் செயற்பட வேண்டும். என்றார்.












