சட்டவிரோதமான மண் அகழ்வை தடுக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்


கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி மற்றும் புணானை நீர்ப்பாசன  திட்டத்தின்  கீழ் உள்ள பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் தனியார்களினால் மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெறுவதனால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரின்றி பாதிக்கப்படுவதாக தெரிவித்து  உடன் அதனை தடுக்க கோரியும் உடனடி தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்தது நேற்று செவ்வாய் கிழமை வாகனேரி வகிலாவிலா சந்தியில் வீதியினை மறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரதேச விவசாயிகள் ஈடுபட்டனர்.


சம்பவ இடத்திற்கு வருகைதந்த விவசாயிகள் எமது பிரதேசத்தில் பல இடங்களில் மண் அகழ்வு நடவடிக்கையில் இரவு பகல் என்று பாராமல் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இதற்கு பல அரச அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கடந்த வாரம் கிரான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவ் நடவடிக்கையினை தடுத்து நிறுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதனையும் செவிமடுக்காது திருட்டுத்தனமாக  மண் அகழ்வு  நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

இப்பிரதேசத்தில் சட்டரீதியாக வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்களுக்கு மேலதிகமாகவும் வெளியிட அனுமதிப்பத்திரங்களின் துணையுடன் மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.


இவ்வாறு அகழப்படும் மண் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி  செய்யப்படுவதாக தெரிவித்தனர்.இவர்களது குறித்த செயற்பாட்டினால் வாகனேரி குளத்தில் இருந்து பெறப்படும் நீரின் அளவு வழங்களில் தடையும் தாமதமும் மண் அகழப்பட்ட இடங்களில் நீர் வழிந்தோடுவதனால் அப்பிரதேசங்களில் நீர் தேங்கி காணப்படுவதாகவும் இதனை தவிர்க்க மேலதிக நீர் தேவைப்படுவதாகவும் விவசாய நிலங்களுக்கு நீர்ப் பாய்ச்சலில்   சீரற்ற தன்மை காணப்படுவதாகவும் இதனால் தமது விவசாய நெற் செய்கை பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

மண் ஏற்றி அணைக்கட்டினை உடைக்காதே. மண் ஏற்றி வாகனேரி விவசாயத்தினை பாதிக்காதே.ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே ஊழல் செய்யும் அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்து என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை கையில் ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதன்போது கிரான் உதவி பிரதேச செயலாளர் ஜீ.அருணன் புவிசரித மண்ணியல் நிபுணர் சீ.கே.டபிள்யு.பண்டார மற்றும்  வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ.திப்புட்டுமுனவ ஆகியோர்களிடம் மகஜர் சமர்பிப்பதனர். செங்கலடி உறுகாமப் நீர்பாசன பொறியிலாளர் எஸ்.நிரோஜனும் பிரசன்னமாயிருந்தார்.

அவ் மகஜரில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி மற்றும் புணானை நீர்ப்பாசன திட்டடத்தின்  கீழ் உள்ள பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் தனியார்களினால் மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெறுவதனால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரின்றி பாதிக்கப்படுவதாவும் 5000 விவசாய குடும்பங்களின் வாழ்வாதரங்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  இது தொடர்பாக பல முறை அரச அதிகாரிகளிடம் தெரிவித்தும் பாராமுகமாக இருப்பதாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பாக எந்த அரச அதிகாரிகளிடமும் மனு கொடுப்பதில்லையெனவும் இதனால் பலன் எதுவும் கிடைக்கப்போவதில்லையெனவும் தெரிவித்து இந்த போராட்டத்தினை முன்னெடுப்பதாகவும் இதற்கு உடன் தீர்வு கிடைக்கப்பெறாத பட்சத்தில் போராட்டத்தின் வடிவம் மாற்றமடையும் என்று அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.