மண்முனை மேற்கில் 116 மாணவர்களுக்கு திவிநெகும புலமைப் பரிசில் - video

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் (7ஆம்,8ஆம் திகதிகளில் ) வாழ்வின் எழுச்சி தலைமையக முகாமையாளர் த.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது.

குறைந்த வருமானம் பெறும் சமுர்த்தி பயன்பெறும் குடும்பங்களைச் சேரந்த க.பொ.த உயர்தரம் கற்கும் 2017ஆம்,2018ஆம் ஆண்டுகளில் பரீட்சை எழுதவிருக்கும் 116 மாணவர்களுக்கு இதன்போது புலமைப் பரிசில் பணமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதில் 2014ஆம் ஆண்டிலிருந்து கல்வி கற்கும் 58 மாணவர்களுக்கும், 2015ஆம் ஆண்டிலிருந்து கல்வி கற்கும்58 மாணவர்களுக்குமாக மாதாந்தம் 1500 ரூபா வீதம் இரண்டு வருடங்களுக்கென வழங்கப்பட்டது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் இங்கு வருகைதந்த மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பேசுகையில்,

எம்முடன் இறுதிவரை சேர்ந்திருக்கும் அழிவில்லாச் சொத்து கல்வி ஒன்றுதான், மாணவர்கள் அனைவரும் இதனை இலட்சியத்துடன் கற்று தாய்தந்தையருக்கும் நாட்டுக்கும் நற்பெயரை பெற்றுக்கொடுக்க வேண்டும். 

குறைந்த வருமானம் பெறும் குட்ம்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென அரசினால் வழங்கப்படும் இப்புலமைப்பரிசில் மூலம் கிடைக்கும் பணத்தினை கல்விக்காக மட்டும் பயன்படுத்தவேண்டும்.  

பொருளாதார வறுமைக்கு மத்தியிலும் பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்கின்றனர், அவர்கள் தமது பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும், ஒரு நல்ல தொழிலைப் பெறவேண்டும் எனும் எண்ணத்துடன் இருப்பார்கள் அவர்களது அந்த எண்ணத்தை மாணவர்களாகிய நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அதேபோன்று மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கொன இன்று இந்த புலமைப் பரிசில் பணத்தினை வழங்கும் அரசின் நோக்கத்தினையும் இதனைப் பெறும் நீங்கள் நிறைவேற்ற வேண்டும். என பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, வாழ்வின் எழுச்சி முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி த.மகேந்திரன், சமுகப் பாதுகாப்பு உத்தியோகத்தர் கே.ஜெயக்குமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.