வீதியில் இறங்கி போராடினாலும் நீதிமன்ற தீர்ப்பை மாற்ற முடியாது

வீதியில் இறங்கி மாணவர்கள் போராடுவதால் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி குறித்த நீதிமன்ற தீர்ப்பை மாற்ற முடியாது என பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

போராட்டங்கள் மாத்திரமன்றி பாராளுமன்றத்தினால் கூட இந்தத் தீர்ப்பை மாற்றமுடியாது என்றும் அவர் கூறினார்.


23/2 நிலையியற் கட்டளையின் கீழ் தினேஷ் குணவர்த்தன எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவையும் மீறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையாலேயே அவர்களைக் கலைப்பதற்கு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தவேண்டி ஏற்பட்டதாகவும் அமைச்சர் பதிலளித்தார்.

பல்கலைக்கழக துறையில் தற்போது பெரும் குழப்ப நிலையொன்று நிலவுவதாகவும் விரிவுரைகளை நடத்த முடியாத நிலைமையொன்று ஏற்பட்டிருப்பதாகவும் தினேஷ் குணவர்த்தன எம்பி தனது கேள்வியில் சுட்டிக்காட்டியிருந்தார். நிராயுத பாணிகளாக நின்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் கருத்து சுதந்திரத்தை தடுக்கும் செயற்பாடாக இதனைத் தாம் பார்ப்பதாகவும், இதற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் கேட்டார்.

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.திசாநாயக்க உயர்கல்வி அமைச்சராக இருந்த காலத்திலேயே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி நிறுவப்பட்டது. அன்று அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் இன்று குழந்தைப் பிள்ளைகள்போல் பேசுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தனது பதிலில் குறிப்பிட்டார்.

அந்தக் காலப் பகுதியில் சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கத்தினால் 600 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சைட்டம் விவகாரம் குறித்து நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. இதற்கு எதிராக மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராடுவதால் தீர்ப்பை மாற்ற முடியாது. பாராளுமன்றத்தினால் கூட இதனை மாற்ற முடியாது. நீதிமன்ற தீர்ப்பை நீதிமன்றத்தாலேயே சவாலுக்கு உட்படுத்த முடியும். தேவையாயின் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்றார்.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவார் என்பதற்காகவே மருத்துவ சபையின் தலைவராக இருக்கும் பேராசிரியர் காலோ பொன்சேகாவுக்கு கடந்த அரசாங்கம் தலைவர் பதவியை வழங்கியது என்றும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

இதன்போது குறுக்கிட்ட ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ரமேஷ் பத்திரண, உயர்கல்வி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு பிழையான தகவலை வழங்கியிருப்பதாக கூறினார். சைட்டம் தொடர்பில் மாணவர் ஒருவரே வழக்கு தாக்கல் செய்திருந்ததுடன், சுகாதார அமைச்சரே அதன் பிரதிவாதியாக இருந்தார்.

இரு தரப்பினருக்கும் இடையில் இந்த விடயத்தில் இணக்கப்பாடொன்று இருந்ததாகவும் நீதிமன்றத்தின் ஊடாக அரசாங்கம் தமது மறைமுக நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதாகவும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனினும்,இந்த வழக்கு விசாரணையின் போது இலங்கை மருத்துவ சபை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள முயற்சித்த போது, அதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது என்று நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்ததாகவும் வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றம் சென்றிருந்தால் அநுரகுமார திசாநாயக்கவுக்கு இந்த விடயம் புரிந்திருக்கும் என்றும் உயர்கல்வி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.