தனியார் மருத்துவ மனைகளின் தராதரங்கள் , அறவிடப்படும் கட்டணங்கள் பற்றி அரச மருத்துவ உத்தியோகத்தர் சங்கம் பேசுவதில்லை

அரச மருத்துவ உத்தியோகத்தர் சங்கத்தின் சில செயற்பாடுகளால் மருத்துவர்கள் சிரமங்களை எதிர்கொள்ளுகின்றனர். தனியார் மருத்துவ மனைகளின் தராதரங்கள் பற்றியும் அவற்றில் அறவிடப்படும் கட்டணங்கள் பற்றியும் அரச மருத்துவ உத்தியோகத்தர் சங்கம் பேசுவதில்லை  என நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வின் போது இதனை தெரிவித்தார்.


விவாதத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன:

சகல தனியார் வைத்தியசாலைகளுக்கும் கட்டண கட்டுப்பாட்டை ஏற்படுத்தப் போவதாக தெரிவித்தார். நியாயமற்ற விதத்தில் கட்டணம் அறவிடும் வைத்தியசாலைகள் பற்றி மக்கள் முறையிட்டுள்ளார்கள். அவர்களின் முறைப்பாடுகளை பரிசீலிக்கப்படும்.

மருந்து விலைகளை குறைத்ததன் மூலம் எந்தவொரு நிறுவனத்திற்கும் நஷ்டம் ஏற்படவில்லை. எதிர்காலத்தில் மேலும் பல மருந்து வகைகளின் விலை குறைக்கப்படும். சகலருக்கும் கல்வி கற்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க திரு.மஹிந்த ராஜபக்ஷ துணைபுரிந்தார். தனியார் வைத்தியசாலை உரிமையாளர் நெவில் பெர்னாண்டோ தேர்தலில் திரு.ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்ததையும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.


ஒரு நாட்டின் சனத்தொகையில் ஒரு இலட்சம் பேருக்கு சராசரியாக 200 வைத்தியர்கள் இருப்பது அவசியம். ஆனால், இலங்கையில் ஒரு இலட்சம் பேருக்கு 60 வைத்தியர்களே சேவை புரிகின்றனர். இலங்கையில் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள் உள்ளனர். அரச வைத்தியசாலைகளைப் பேணுவதற்கு ஒவ்வொரு வருடமும் 167 கோடி ரூபா செலவிடப்படுகிறதென்றும் அவர் குறிப்பிட்டார்.



பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றுகையில்:

மருத்துவக் கல்வியையும், சுகாதார சேவையையும் வலுப்படுத்த அரசாங்கம் பாடுபட வேண்டும் என்றார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர உரையாற்றுகையில்: 
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பலரது பிள்ளைகள் வெளிநாடுகளில் மருத்துவம் பயிவுகின்றனர். தனியார் மருத்துவ கல்லூரிகள் பற்றி சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறினார்.