மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் தமக்கு தலை என்று ஒன்று தேவையெனில் கட்டாயம் தலைக்கவசத்தை அணிந்து செல்ல வேண்டும். நமது பாதுகாப்பைப் பற்றி ஏனையோர் கூறிக்கொள்ளும் நிலைக்கு நாம் ஆளாகக் கூடாது. என கிழக்கு மாகாணத்திற்கான சமூகப் பொலிஸ் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரெட்ணம் தெரிவித்தார்.
வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர் தலைமையில் கன்னங்குடா மாகவித்தியாலயத்தில் இடம்பெற்ற, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சமுக ஒழுக்கங்கள் தொடர்பான விளக்ளமளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை 23ஆம் திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில், மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் பல்வேறுபட்ட வேலைகளும் பொறுப்புக்களும் இருக்கும் இது ஜதார்த்தம். சிலர் அவசரத்தில் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் செல்லும்போது அவசரத்தில் ஞாபக மறதியில், அல்லது தெரிந்துகொண்டே தலைக்கவசத்தின் பட்டியை பூட்டாமல் சென்றுவிடுவார்கள் இவ்வாறனவர்களுக்கு சில சமயங்களில் விபத்தொன்று ஏற்படுமானால் அவர்களின் தலை ஒருபக்கமிருக்கும் தலைக்கவசம் மற்றுமொருபக்கமிருக்கும் நிலையும் ஏற்படலாம்.
விபத்தொன்பது எதிர்பாராத விதத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத முறையில் ஏற்படுகின்றது. நம் நாட்டில் 45வீதமான விபத்துக்கள் பாரதூரமான விபத்துக்களாக இருக்கின்றன. இங்கு நாளொன்றுக்கு சுமார் 6 தொடக்கம் 8 பேர் இவ் விபத்துக்களினால் இறக்கின்றனர். இம் மரணத்திற்கு பிரதான காரணம் கவலையீனம் என்றுதான் சொல்லவேண்டும்.
அண்மையில்கூட கல்முனை பிரதேசத்தில் பாரிய விபத்தொன்று இடம்பெற்றது, இதற்கொல்லாம் காரணம் கவலையீனம்தான். 12 பேர் பயணம் செல்லக்கூடிய வாகத்தில் 22 பேர் பயணம் செய்தால் இது யாருடைய தவறு? நித்திரை தூக்கத்தில் வாகனம் ஓட்டினால் அது யார் தவறு?. நமது பாதுகாப்பை முதலில் நாம் தேடிவைத்துக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் மற்றவர்கள் பாதுகாப்பு தருவார்கள் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது.
ஒவ்வொரு பாதசாரிகளும் பயணிகளும் பாதையில் பயணிக்கும்போது தமக்கென ஒதுக்கப்பட்ட வழி ஊடாக செல்வோமானால் இலங்கையில் பெரும்பாலான வீதி விபத்துக்கள் தடுக்கப்படும். எனவே நமக்கான பாதுகாப்பை நாமே நம்வசம் வைத்திருக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.












