அரச வைத்திய அதிகாரிகளுக்கு மேலும் மருத்துவர்கள் உருவாகி தங்களது பணப்பைக்கு பாதிப்பு ஏற்படும் என அச்சம்

மாலபே  தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.



இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க “இவர்கள் தாதியர்களுக்கு பட்டம் வழங்குவதை எதிர்க்கின்றனர். உதவி வைத்திய அதிகாரிகளுக்;கு எம்.பி.பி.எஸ் பட்டம் வழங்குவதையும் எதிர்க்கின்றனர். தாதியர் பட்டம் வழங்கும் கல்லூரிக்கும் இவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். இவர்கள் எதற்குத்தான் எதிர்ப்பை வெளியிடவில்லை.

எனவே சுதந்திரக் கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறிவருகின்றனர். வாழ்நாள் முழுவதிலும் அப்பாவி மக்களினதும், அரசாங்கத்தினதும் நிதியில் கற்றுக்கொண்டு 90 வீதமானவர்கள் வெளியேறியவுடன் பணத்திற்காக மருத்துவம் செய்கின்றார்கள்தானே. என்ன கதை இது.

 உலகத்தில் இல்லாத சட்டத்தை ஸ்ரீலங்காவிற்குள் கொண்டுவர இவர்கள் முயற்சிப்பது ஏன்?

எங்களை விடவும் பொருளாதார ரீதியில் கீழே இருக்கும் நேபாளத்தில் 393 தனியார் பல்கலைக்கழங்கள் உள்ளன. பாகிஸ்தானில் 59ம், பங்களாதேசத்தில் 51 தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இந்தியாவில் 3101 உள்ளன. ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள பைத்தியம் என்ன? மேலும் மருத்துவர்கள் உருவாகி தங்களது பணப்பைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினாலும், சுயநலத்தினாலும் இவர்கள் செயற்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.