(காரைதீவு நிருபர் சகா)
சமகாலத்தில் எரியும் பிரச்சினையாக இருந்துவருகின்ற வடக்கு கிழக்கு மாகாண வேலையில்லாப்பட்டதாரிகளின் பிரச்சினையை எதிர்வரும் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரவிருக்கின்றேன்.இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் காரைதீவில் 15வது நாளாக சத்தியாக்கிரகப்போராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகளைச் சந்தித்து கூறினார்.
அம்பாறை வேலையில்லாப்பட்டதாரிகள் திங்கட்கிழமை 15வது நாளாக காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே சத்தியாக்கிரகப்போராட்டத்திலீடுபட்டனர்.
அங்கு கோடீஸ்வரன் மேலும் கூறுகையில்:
எதிர்வரும் 22ஆம் திகிதி பாராளுமன்ற விசேடஒத்திவைப்புப் பிரேரணையை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக உங்கள் பட்டதாரிப்பிரச்சினையை கொண்டுவரவிருக்கின்றேன்.
கடந்ததடவை கொண்டுவரமுயற்சித்தேன்.அன்று காணி தொடர்பான பிரச்சினை கொண்டுவரப்பட்டமையால் முடியாமல்போயிற்று.ஆதலால் இம்முறை கட்டாயம் அதனை கொண்டுவரவிருக்கின்றேன்.
அங்கு சம்பந்தப்பட்டவர்கள் பிரதமராகவிருந்தாலும் பதிலளிக்கவேண்டும். எனவே நம்பிக்கையோடு இருங்கள் . சகலதும் சாதகமாக நடக்கும்.
பட்டதாரிகள் இடைமறித்து அங்கு இதற்கு நிதி இல்லையென்று சொல்லி கையைவிரித்தால் எனன் செய்வீர்கள்? என்று கேட்டார்கள்.
பதிலுக்கு அனைத்திற்கும் அவர்கள் பதிலளிக்கவேண்டும் என்றார் கோடீஸ்வரன்.
மேலும் பட்டதாரிகள் கூறுகையில்;
நீங்கள் இரண்டாவது தடவையாகவும் வந்த சந்தித்தமைக்கு நன்றி. ஆனால் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும்வரை நாம் இந்தவிடத்தை விட்டு நகரமாட்டோம்.என்றனர்.


















