மகிழுர்முனை சக்திவித்தியாலயத்திற்குச் செல்லும் பாதையில் நீர் தேங்கிக் கிடப்பதால் டெங்கு அபாயம். மக்கள் அச்சம்.


(சா.நடனசபேசன்)
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகிழுர்முனை சக்திவித்தியாலயத்திற்குச் செல்லும் பாதையில் நீர் தேங்கி நிற்பதனால் டெங்கு நுளப்பு பெருகுவதற்கான வாய்ப்பாக அமையும் என  சக்தி வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இவ் வீதியானது ஓந்தாச்சிமடம் மகிழூர்க் கிராமத்தின் பிரதான வீதியில் இருந்து  ஒன்றரைக் கிலோ மீற்றர் நீளமுடைய இந்த வீதி வாகனங்கள் செல்லமுடியாத வாறு குன்றும் குழியுமாக இருப்பதுடன் பல இடங்களில் நீர் தேங்கி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்
அதேவேளை சக்தி வித்தியாலயத்திற்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் அடங்கலாக பலர் இந்த வீதியினூடகவே பிரயாணம் செய்து வருவதுடன் பாடசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னாலும் அவ்வீதியில் பல இடங்களில் மழை பெய்தால்; நீர் தேங்கிநிற்பதுடன் இந்த நீரினால் டெங்கு நுளம்பும் பெருகுவதற்கான வாய்ப்பும் அதிகம் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
கிழக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் நிலையில் இப்பாடசாலைக்குச் செல்லும் பிரதான வீதி பற்றியும் பாடசாலைக்கு முன்னால் தேங்கிநிற்கும் நீர்பற்றியோ யாரும் சிந்திக்காமல் இருப்பது வேதனையாக இருப்பதாக பெற்றோர்கள் சுட்டிக் காட்டுகின்றனர் அதே வேளை இந்த வீதி பல ஆண்டுகளாக குன்றும் குழியுமாக இருப்பதுடன் சிறிய மழைபெய்தால் மாதக்கணக்கில் நீர்தேங்கி நிற்கின்றது இது தொடர்பாக பல அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் தெரியப்படுத்தியும் இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என அப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அவ்வீதியால் பிரயாணம் செய்யும் பொது மக்களினதும் சக்தி வித்தியாலய மாணவர்களின் நலன் கருதியும்  இவ்வீதியை செப்பனிட உரியவர்கள் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.