முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல துறைகளிலும் கடந்த வருடம் முதலாவது மாவட்ட நிலையை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், உயர்கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கலும், சிறப்பு பட்டிமன்றமும் நேற்று(25) சனிக்கிழமை நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அலிகம்மை பிரதேசத்தினை சேர்ந்த சட்டமானி, கலைமானி ஆகிய துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட இரு மாணவர்களுக்கான உயர்கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவும், பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட உரையாளர்களுக்கு நினைவுச்சின்னமும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. உயர்கல்விக்கான ஊக்குவிப்பு தொகையானது அவர்களது பட்டப்படிப்பு நிறைவுபெறும் வரை மாதாந்தம் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், முனைப்பு சுவிஸ் அமைப்பின் தலைவர் மா.குமாரசாமி, அமைப்புக்களின் பிரதிநிதிகள், முனைப்பு நிறுவனத்தின் ஆலோசகர், பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வினை கதிரவன் அமைப்பினர் ஒழுங்குப்படுத்தி நடாத்தினர்.












