
(சித்தா)
கிழக்கு மாகாணத்தின் ஆரம்பக் கல்வி அபிவிருத்தியில் கோட்ட மட்டத்திலான செயற்பாடுகள் கடந்த வருடத்தில் இருந்து துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ் வருடச் செயற்பாடுகள் பற்றிய திட்டமும் நடைமுறைப்படுத்தலும் எனும் தொனிப்பொருளில் மட்/மகாஜன கல்லூரி மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு. எஸ். மனோகரன் மற்றும் கிழக்கு மாகாண ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பூ. உதயகுமார் ஆகியோர் இக் கலந்துரையாடலை நடாத்தினர்.
இத் திட்டமிடல் கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தின் வலயக் கல்வி அலுவலக கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆரம்பப் பிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், மொழிப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கணித பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர் .
இந்த வகையில் போரதீவுப் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.பாலச்சந்திரன் அவர்களின் வழிகாட்லுக்கு அமைவாக அண்மையில் மட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்திலும், இன்று (24.03.2017) மட்/திருப்பழுகாமம் விபுலாநந்தா வித்தியாலயத்திலும் ஆரம்ப்பப் பிரிவு மாணவர்களுக்கான மொழி விருத்திச் செயற்பாடு, கணித எண்ணக்கரு விருத்திச் செயற்பாடு, சுற்றாடல் சார் செயற்பாடு போன்றவற்றுக்கான செயற்பாடுகளை முன் வைத்து முகாம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இம் முகாமில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




















