மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட விடுதிக்கல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வரலாற்றில் முதற்தடவையாக செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு நேற்று(19) ஞாயிற்றுக்கிழமை வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
தரம் - 01தொடக்கம் தரம் 05 வரையான வகுப்புக்களைக் கொண்ட இப்பாடசாலையில், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து விளையாட்டுப்போட்டி நடைபெறாத நிலையில் இவ்வாண்டு நேற்றைய தினம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
தேசியக்கொடி. பாடசாலைகொடி என்பன ஏற்றப்பட்டு, மாணவர்களினால் ஒலிம்பிக்தீபமும் ஏற்றப்பட்டது.
மாணவர்களுக்கான பழம்பொறக்குதல், தடைதாண்டல், போத்தலில் நீர்நிரப்புதல், நின்ற நீளம் பாய்தல், கலப்பு அஞ்சல் போன்ற பல்வேறான விளையாட்டுக்களும், பழைய மாணவர்களுக்கான குறுந்தூர ஓட்டம், பெற்றோர்களுக்கான கயிறு இழுத்தல், பழம் மாற்றுதல் போன்ற பல்வேறு விளையாட்டுக்களும் நடைபெற்றன.
வித்தியாலயத்தின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாணவர்களின் அணிநடை மற்றும் உடற்பயிற்சி கண்காட்சி போன்ற நிகழ்களும் இடம்பெற்றன.
போட்டிகளில் பங்கேற்றிருந்த அனைத்து மாணவர்களுக்கும் இதன்போது பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தாயசீலன், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டப்பாடசாலைகளின் அதிபர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.












