குழியில் வீழ்ந்த மூதாட்டியின் மரணத்தில் சந்தேகம்; பேரப்பிள்ளைகள் மோதல்

ஆரையம்பதி கர்பலா கிராமத்தில் காளிகோயில் வீதியில் குழியொன்றினுள் வீழ்ந்து மரணமான மூதாட்டியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு திடீர் மரண விசாரனை அதிகாரி உத்தரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.நிசாந்த தெரிவித்தார்.

இதேவேளை குறித்த மூதாட்டியின் மரணவீட்டில் நேற்று (19) மாலை இடம்பெற்ற கைகலப்பில் கத்திக்குத்துக்கிலக்காகி கர்ப்பிணித்தாய் உட்பட ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஏனையோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தசாமி செல்வமணி எனும் 74 வயது மூதாட்டியின் மரண இறுதிச்சடங்கின் போது மரணமானவரின் பேரப் பிள்ளைகளிடையே இடம்பெற்ற மோதலின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.


குறித்த மூதாட்டி,  நேற்று முன்தினம் (18) குழியொன்றினுள் வீழ்ந்து மரணமாகியுள்ளார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, பேரப்பிள்ளைகளின் இரு குழுக்களுக்கள் மோதலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

இம்மோதல் சம்பவத்தின் போது ஆபத்தான நிலையிலுள்ள ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, கர்ப்பிணித்தாய் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிசார் இது தொடர்பான தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.