கிழக்கு மாகாண பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கு துரித நடவடிக்கை - கிழக்கு முதலமைச்சர் தெரிவிப்பு

 கிழக்கு மாகாணத்தில் உள்ள  ஆசிரிய வெற்றிடங்க​ளை  நிரப்புவதற்கான  அனுமதி கிடைத்துள்ள  நிலையில்  அதற்கு  பட்டதாரிகளை முழுமையாக உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இதனூடாகா கிழக்கு மாகாணத்தில் உள்ள  வெற்றிடங்களை  நிரப்புவதற்கான  முழுமையான  வாய்ப்பு கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறினார்.


அத்துடன்  மாகாணத்தில்  உள்ள பாடசாலைகள், அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களையும்  உடனடியாக நிரப்புவதற்கான  அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இது விடயமான உயர்மட்டக் கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை 14.03.2017 பிற்பகல் திறைசேரியில்  இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவின் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம் தலைமையில் திறைசேரியில்  இடம் பெற்ற கூட்டத்தின் போது துறைசார் பட்டதாரிகளையும் அவரவர் துறைசார் ரீதியிலான  வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு ஏதுவான  யோசனைகளை  வழங்குமாறும், கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை உள்ளீர்ப்பது  தொடர்பான கட்டமைப்பொன்றை  ஒரு கிழமைக்குள் தயாரித்து  வழங்குமாறு கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள 4703  ஆசிரியர்  வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளை  எவ்வாறு  உள்ளீர்ப்பது  என்பது  தொடர்பான  பொறிமுறையை  தயாரிக்குமாறும் கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதாரத் திணைக்களம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றுமுள்ள திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்களில் காணப்படும்  வெற்றிடங்களை நிரப்புவதற்கு  உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுச்சேவை  ஆணைக்குழுவுக்கு  இதன் போது பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு ஏதுவான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு  முகாமைத்துவ திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, தேசிய கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்வியமைச்சின் செயலாளர், கல்விப் பணிப்பாளர், திறைசேரியின் பிரதிநிதி, தேசிய முகாமைத்துவத் திணைக்களத்தின் பிரதிநிதிகள், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர், மாகாண தலைமைச் செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

கிழக்கு மாகாணப்  பாடசாலைகளில்  67 ஆய்வுகூட உதவியாளர்கள் 284, பாடசாலைக் காவலாளிகள் 261, பாடசாலை சிற்றூழியர்கள் மற்றும் 384 சுத்தகரிப்புப் பணியாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இதேவேளை சுகாதாரத் துறையில் உள்ள 300க்கும்  மேற்பட்ட வெற்றிடங்களும் இருந்துவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  சுகவீனமுற்றிருந்த நிலையிலும் அதனை பொருட்படுத்தாது  இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாகவும் முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.