மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தினால் அபிவிருத்தி ஊடக அறிக்கை - ஊடக செயலமர்வு

நாட்டின் பல்துறை அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்குடன்,  மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தினால் அபிவிருத்தி ஊடக அறிக்கை  தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு புதன்கிழமை 29ஆம் திகதி மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹேட்டேலில் நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றியம் மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம், மன்னார்,வவுனியா, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய ஏழு மாவட்டத்திலும் தனது அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்காக சுமார் 10 ஆயிரம் கோடி ரூபா பணத்தினை, மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் உள்ள ஆறு (06) அமைப்புக்கள் ஊடாக அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்திவருகின்றது.

இதற்கென மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 200 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், நிலையான வாழ்வாதாரங்ளை உயர்த்துதல், உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்புக்களை மேம்படுத்துதல், தரமான சமூக சேவைகளை பெறுவதற்கான வாய்ப்பளித்தல், தரமான தொழில் முறைக் கல்வி பயிற்சிகளை வழங்கல், உள்நாட்டு உற்பத்தியாளர் நிறுவனங்களின் திறனை வலுப்படுத்துதல் போன்ற மக்கள் சமூகத்தையும் பிரதேசத்தையும் வலுவூட்டும் செயற்படுகளுக்காக இந் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய இவ் விளக்கமளிக்கும் செயலமர்வில் வளவாளர்களாக சிரேஸ்ட ஊடக பயிற்சியாளர்களான பி.மதனவாசன், எவ்.வி.குணசேகர பேன்றோர் கலந்துகொண்டு அபிவிருத்திகள் தொடர்பில் தொடரான செய்தியினை அறிக்கையிடல் பற்றியும் அவ் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தொடர்ச்சியான ஊடக கண்காணிப்பு மற்றும் மக்களுக்கான அபிவிருத்தியின் தேவைப்பாட்டினை வௌிக்கொணர்தல் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது தௌிவுபடுத்தப்பட்டது.

இந் நிகழ்வில், மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள்,  ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும்   மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இச் செயலமர்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது.