கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பதற்கு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கப்பம் கோரப்பட்டுள்ளது

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருக்கும் இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து இலங்கை பணியாளர்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேஷினி கொலொன்னே கூறியுள்ளார்.


சோமாலியாவின் ஜிபூட்டி துறைமுகம் அருகில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கை பணியாளர்கள் 8 பேர் இருப்பதாக வர்த்தகப் கப்பல் பணிப்பாளர் அஜித் செனெவிரத்ன தெரிவத்துள்ளார்.

இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்பை ஏற்படுத்தி செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏரீஸ் 13 என்ற எரிபொருள் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் நேற்று முன்தினம் (13) கடத்தப்பட்டிருந்தது.

இந்த கப்பலையும் அதிலுள்ளவர்களையும் விடுவிப்பதற்காக கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் கடற்கொள்ளையர்கள் இதுவரை எவ்வளவு பணம் கப்பமாக வழங்கப்பட வேண்டும் என்பதை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.