கிழக்கில் டெங்கு; கட்டுப்படுத்த வேலைத்திட்டங்கள் ஆரம்பம் ! ஆளணியுடன் வளங்களும் அனுப்பி வைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு சகல வளங்களும் அங்கு அனுப்பப்பட்டு, வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முப்படையினர், மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் என பல தரப்பினரும் இணைந்து திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக கிண்ணியா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குச் சென்று டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதற்குத் தேவையான சகல வளங்களையும் அரசாங்கம் அனுப்பியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
டெங்கு நோய் ஒழிப்பு செயற்பாட்டுக்காக பொலனறுவையிலிருந்து மேலதிக ஆட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி செல்லவிருப்பதாகவும் கூறினார்.
23/2 நிலையியற் கட்டளையின் கீழ் தினேஷ் குணவர்தன எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்பேதே இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் அதிகரித்துவரும் டெங்குநோய் தாக்கம் தொடர்பிலும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் வினவியிருந்தார்.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்குநோய் பரவுவதைத் தடுப்பதற்கான சகல வளங்களையும் அரசாங்கம் அனுப்பியுள்ளது. நாட்டில் நோய்கள் பரவும் சூழலொன்று காணப்படுகிறது. இலங்கை மாத்திரமன்றி மாலைதீவு, தென்கொரியா என உலக நாடுகளிலும் நோய்கள் பரவுகின்றன. மாலைதீவில் பறவை காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் தீவிரமாகப் பரவி வருவதுடன், பறவைக் காய்ச்சல் காரணமாக தென்கொரியாவில் ஆயிரக்கணக்கான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. தொற்று நோய்கள் பரவும் சூழலொன்று காணப்படும் நிலையில், அரசாங்கம் இது குறித்து விழிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகையில், டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் முப்படையினர் 800 பேரை சேவையில் அமர்த்தியுள்ளனர். இதனைவிட பல்வேறு தொண்டர் அமைப்புக்களும் தமது உறுப்பினர்களை அனுப்பி கிண்ணியா உள்ளிட்ட பகுதிகளில் சுத்திகரிப்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர். ஏனைய பகுதிகளிலிருந்து தன்னார்வ தொண்டர்கள் சென்று டெங்கு நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் நன்றி கூறுவதாகத் தெரிவித்தார்.