பெண்கள் வெற்றியடையும்போது சமூகம் வெற்றியடைகிறது

வளமான ஸ்ரீலங்காவின் சகல பிரஜைகளுக்கும் சம சந்தர்ப்பம் எனும் நோக்கத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப், பெண்களுக்காக கைகளைத்தட்டி ஆதரவளிப்பதோடு, பெண்கள் வெற்றியடையும்போது சமூகம் வெற்றியடையவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மத்திய மாகாண பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்க தூதரகத்தின் அனுசரணையுடன் கண்டி அமெரிக்க தகவல் கூடத்தில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் தன்னிறைவடைந்து அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்குத் தேவையான தகுதியையும் திறமையையும் வழங்கும் பொருட்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் கலாநிதி சோபனா இராஜேந்திரன் இப்பயிற்சித் திட்டத்தை வடிவமைத்து நடைமுறைப்படுததினார்.

விவசாயப் பொருட்கள் காகித உற்பத்திப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் அடங்கலாக அவர்களது வியாபாரப் பொருட்களை நிறுவன பிரதிநிதிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் காட்சிப்படுததும் சந்தர்ப்பம் இதன்போது முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

“வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாக உருவாகுவதற்குத் தேவையான நம்பிக்கையையும் திறன்களையும் அபிவிருத்தி செய்வதற்கு சிறப்பான திறமைகளைக்கொண்ட ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியதாக அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

பெண்களுக்கான தொழில் முயற்சித்திறனை வழங்கும் ஐந்து மாத வேலைத்திட்டமொன்றின் ஒரு நிகழ்வாகவே இக்கண்காட்சி நடைபெற்றது.

சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் வேறு வியாபார திறமைகள் என்பவற்றில் தீவிரபயிற்சிப் பட்டறைகள் இந்த இலவச வேலைத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் அநேகமான பெண்கள் சிறு வியாபாரத்தை ஆரம்பித்துள்ளதோடு, சிலர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.