யுத்த சூழ்நிலை பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கல்விகற்று இன்று பட்டதாரிகளாக இருந்துகொண்டு தொழில் வழங்குமாறு கோரிநிற்கும் எமது கிழக்கு மாகாண பட்டதாரிகளை இந்த அரசாங்கமும் எதிர்க் கட்சியினரும் அவமதித்து வரும் செயற்பாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது, இவர்களின் கோரிக்கையை அதிகாரம் படைத்தவர்களென கூறிக்கெண்டிருப்பவர்கள் வேடிக்கை பார்த்தக்கொண்டிருப்பது வேதனைக்குரியது. என முன்னாள் பிரதியமைச்ரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் முரளிதரன் மேலும் தெரிவிக்கையில், அபிவிருத்தி அடைந்துவரும் எமது நாட்டில் புதிய வேலைகளை உரிவாக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது. நாட்டில் எவ்வளவே திணைக்களங்கள் உள்ளன, பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்தான் வழங்கவேண்டும் என்றில்லை.
கடந்த 2012 இல் இதேபோன்று வேலைகேட்டு பட்டதாரிகள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் அப் போராட்டம் ஒரு நாள்தான் நடைபெற்றது. மறு தினமே அவர்களுக்கான தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அப்போதய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே ஊடாக நான் நடவடிக்கை எடுத்தேன். அதன் பயனாக 2800 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தோம். அது மாத்திரமல்ல தொழிநுட்ப கல்லுரிகளில் எச்.என்.டி.ஏ கல்வியினை நிறைவுசெய்த 350 பேருக்கும் எனது முழு முயற்சியால் பட்டதாரி நியமனங்களை பெற்றுக்கொடுத்தேன். இவ்வாறு தொழிலைப் பெற்றவர்கள் இன்று தமது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டு குடும்பங்களுடன் சந்தோசமாக வாழ்கின்றார்கள். இன்று இவர்களைப் பார்க்கும்போது எனது மனம் மகிழ்ச்சியடைகின்றது.
ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவாக கைதட்டிக்கொண்டு எதிர்கட்சியாகவும் இருந்துகொண்டு 40 நாட்களாக போராடிவரும் பட்டதாரிகளின் போராட்டத்தை கணக்கிலே எடுக்கவில்லை. இது மிக வேதனைக்குரிய விடயமாகும். இது வெறுக்கத்தக்கதுடன் அவர்களை அவமதிக்கும் செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.
இதற்கு அரசாங்கம் மிக விரைவாக ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில் படித்த இளைஞர் யுவதிகளும் தாய்மாரும் பட்டத்தை பெற்றுவிட்டு கைக் குழந்தைகளுடன் வெயிலிலும் மழையிலும் வீதியில் கிடப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
கல்விகற்று சாதாரணதரத்தில் 9ஏ சித்தி பெற்றவர்களை நாங்கள் மேலும் ஊக்கப்படுத்திவருகின்றோம். ஆனால் பட்டப்படிப்பின் நிலை இவ்வாறு இருந்தால் அவர்களை நாங்கள் ஊக்கப்படுத்தி அவர்கள் பட்டதாரியாகி என்ன பிரியோசனம். இது வருங்கால சந்ததிக்கு அச்சத்தையும் விரக்தியையும் ஏற்படுத்துவதாகவே அமைந்துவிடும்.
2012ஆம் ஆண்டில் இதேபோல்தான் தொழில் வழங்குவதில் சில பிரச்சனைகள் காணப்பட்டாலும் நாங்கள் புதிதான தொழில் துறையை உருவாக்கினோம். முடியாது என்று ஒன்றுமில்லை வீட்டின் குடும்ப சுமையை தாங்கி நிற்கும் இந்த பட்டதாரிகளுக்கு தொழிலை பெற்றுக்கொடுத்தால் அது அவர்களது வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் சிறப்பாகவே அமையும்.
அரசாங்கம் இதை விடுத்து அரச கைக் கூலிகளுக்கு பீயர் தொழிற்சாலை அமைப்பதற்கும், மதுசார தொழிற்சாலை அமைப்பதற்கும் ஊக்கப்படுத்திக்கொண்டிருக்குதே தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் வேறு எதையுமே செய்ததாக இல்லை. இன்று வாழைச்சேனை காகித தொழிற்சாலை மண்ணாகப் போய்கொண்டிருக்கின்றது அதை மீள கட்டியெழுப்பினாலே பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கலாம் இதையெல்லாம் விடுத்து பயனற்ற திட்டங்களுக்கு பாரிய பணத்தை கொட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த பட்டதாரிகளின் போராட்டத்திற்கு எனது கட்சி முழுமையான ஆதரவினை வழங்குகின்றது. இந்த அரசாங்கம் ஒரு கேள்விக்குறியாகவே ஆட்டம் காணும் நிலையில் உள்ளது, அவர்களால் ஒரு நிலையான தீர்மானத்தை எடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
அதேபோல், தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி என கூறுபவர்களால் வருடக்கணக்கில் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள் ஆனால் இந்த அரசு கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. நாட்டில் இனிமேல்தான் நல்லாட்சி ஏற்படப்போகின்றது என்பதையும் நான் இந்த வேளையில் செல்லிவைக்க விரும்புகின்றேன். என அவர் மேலும் தெரிவித்தார்.













