புகையிரத கடவைக் காப்பாளர்கள் கடமைக்குத் திரும்பியதால் வழமை நிலையில் புகையிரத சேவை

(கான்)
கடந்த 8 நாட்காளாய் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டுவந்த மட்டக்களப்பு மாவட்ட புகையிரத  கடவைக் காப்பாளர்கள்,  இன்று (21) முதல் கடமைக்குத் திரும்பியுள்ளதால் புகையிரத சேவைகள் தடையின்றி  இடம்பெற்று வருகின்றன.
தங்களின் நிரந்த நியமனத்தை வலியுறுத்தி கடந்த 19ஆம் திகதி  மட்டக்களப்பில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தை தாங்கள் முன்னெடுத்துள்ள போதிலும், எதுவித தீர்மானமும் எட்டப்படாத நிலையில், தங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு கடமைக்குத் திரும்புவதாக மட்டக்களப்பு மாவட்ட ரயில் கடவைக் காப்பாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜெயகாந்தன் தெரிவித்தார்.


கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பில் 24 ரயில் கடவைகளில் 72 பேர் கடமையாற்றி வருவதாகவும் மாதத்தில்; 28 நாட்கள் கடமையாற்றினால், 7,000 ரூபாயும்  மாதத்தில் 30 நாட்கள் கடமையாற்றினால்,  7,500 ரூபாயும் தங்களுக்குச்  சம்பளமாக வழங்கப்படுகின்றன.

தற்காலிக அடிப்படையில் ரயில் கடவைக் காப்பாளர்களாக கடமையாற்றும் தங்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்கி அரசாங்கச் சேவைக்குள் உள்வாங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தனர்.