டெங்கற்ற சூழலை உருவாக்குவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியமானது - பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார்

(இ.சுதாகரன்)

சுகாதார அமைச்சினால் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு  வருகின்ற டெங்கு நுளம்பின் தாக்கத்திலிருந்து நாட்டைக் காப்போம். எனும் துரித செயற்றிட்டத்தினை முழுமையாக நிறைவேற்றும் பொறுப்பு பொது மக்களில் தங்கியுள்ளது.தாம் வாழ்கின்ற சுற்றுச் சூழலை முறையாக பாராமரிப்பதன் மூலமாக கொடிய டெங்கு நுளம்புகளின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு களுவாஞ்சிகுடி பிரசேத செயலகப் பிரிவிலுள்ள பெரிய கல்லாறு கிராமத்தில் அண்மையில் தேசிய டெங்கு ஒழிப்பு மாதத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வினை ஆரம்பித்து வைக்கும் போதே களுவாஞ்சிகுடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது டெங்கு அற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் தங்கியுள்ளது. இதனை ஒவ்வொருவரும் இன்றைய காலகட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனையினை பின்பற்றி அதற்கு ஏற்ற வகையில் உமது சூழலை நாமே பாது காக்க வேண்டும். முதலில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்காண்பது அவசியமானது.அதற்கு அடுத்த படியாக அவற்றினை அழிப்பதற்கான நடவடிக்கையினை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மிக அண்மைக் காலமாக டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச ரீதியில் மாபெரும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.

மக்கள் மத்தியில் டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பாக விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுத்தமையால் ஓரளவு டெங்கு நுளம்பின் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளன.எதிர் வரும் காலங்களில் முற்றாக குறைப்பதற்கான நடவடிக்கையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மட்டுமல்லாது இராணுவம் பொலிஸார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.