இந் நாடு வறுமையற்ற நாடாகவும் போதையற்ற நாடாகவும் உருவாக்கும் நோக்கில் கொளரவ ஜனாதிபதி அவர்களும் கொளரவ பிரதமர் அவர்களும் பல கருத்திட்டங்களினூடாக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் இந்த மட்டக்களப்பு மாவட்டம் வறுமை என்ற சவாலுக்குள்ளே இருந்து விடுபடுவதற்கு பல காலமாக போராடிக்கொண்டிருக்கின்றது. என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
சமுர்த்தி திணைக்களத்தின், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரிவினால் நடாத்தப்பட்ட 'சமுர்த்தி அபிமானி' உற்றத்திப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சி நிகழ்வு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டக்களப்பு நாவற்குடா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பி.குணரெட்ணம் தலைமையில் நடைபெற்றது. இதில் சனிக்கிழமையன்று, பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,
இந்த மாவட்டத்திலே போதைப்பழக்கம் மிக அதிகமாக காணப்படுகின்றது. இந்த மாவட்டத்திலிருந்து ஒரு மாதத்திற்கு சாராயம் உட்பட்ட மது பான வகைகளுக்காக மட்டும் சுமார் 400 மில்லியன் ரூபா இந்த மாவட்டத்திலிருந்து வெளியே செல்கின்றது.
இத்துடன் போதைப் பொருட்கள், புகைத்தல் பொருட்கள், போத்தலில் அடைக்கப்பட்ட நீருக்கான பணம், நாங்கள் கொள்வனவு செய்கின்ற பால்மா மற்றும் கோழி இறைச்சிக்கான பணம் என்று பல்வேறு விதமாக இந்த மாவட்டத்தின் பணம் வெளியே செல்கின்றது.
இந்தப் பணம் எந்த வகையில் இந்த மாவட்டத்திற்கு உள்ளே வரும் என்று சொன்னால் இங்கு உற்பத்திப் பொருட்கள் அதிகரிக்கப்பட வேண்டும். உங்களுடைய உற்பத்திப் பொருட்கள் இந்த மாவட்டத்தின் சுயதொழிலை பூர்த்தி செய்வதோடு, ஏனைய இடங்களுக்கும் அது விற்பனைக்காக செல்ல வேண்டும். இந்த பொருளாதார செயற்பாடு சரியாக மாறுகின்ற போதுதான் இந்த மாவட்டத்திலே மக்களுடைய வாழ்வாதார பிரச்சனை, அவர்கள் வறுமையற்றவர்களாக, பசியற்றவர்களாக, நோயற்றவர்களாக வாழக்கூடிய நிலமை ஏற்படும்.
அதற்காக முதல் இலக்காக குறிக்கப்பட்டிருப்பவர்கள் இந்த சமுர்த்திப் பயனாளிகள். இன்று சமுர்த்திப் பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களைப்பார்த்தேன், பல பொருட்கள் மிகவும் தரத்தோடு காணப்படுகின்றன சில பொருட்கள் மேலும் தரமுயர்த்தப்பட வேண்டும். அத் தரத்தினை உயர்த்தவேண்டியவர்களாக குறித்த திணைக்களத்தின் அதிகாரிகள் இருக்கின்றார்கள்.
இதைவிட பிரதேச செயலகங்களிலே பொருளாதார ஆலோசனை மையம் என்று ஒரு மையம் திறக்கப்பட்டிருக்கின்றது குறித்த பிரதேச செயலகப்பிரிவுகளில் உற்பத்தி செய்யப்படும் அத்தனை பொருட்களையும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அந்த பொருளாதார ஆலோசனை மைதயத்தினூடாக விளம்பரப்படுத்தி வியாபாரப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். பல இடங்களிலே நான் தனிப்பட்ட நபர்களைச் சந்தித்தபோது, தங்களுடைய பொருட்கள் இடைத் தரகர் இல்லாமல் மிகவும் உயர்ந்த விலைக்கு விற்கப்படுவதாக அவர்கள் மகிழ்வடைந்திருக்கின்றார்கள்.
எனவே சமுர்த்திப் பயனாளிகளும் இந்த பொருளாதார ஆலோசனை மையத்தின் சேவையினை பயன்படுத்திக்கொண்டு அவற்றினூடாக உச்ச பயனை அடைய வேண்டும்.
வெறும் வார்த்தைப் பிரயோகங்களும், பயிற்சிநெறிகளும், கருத்தரங்குகளும் நடத்துவதால் மட்டும் இந்த மாவட்டத்தின் மக்களின் வறுமை நிலையை ஒழிக்க முடியாது. ஒவ்வொரு பிரதேசத்திலும் என்ன நிலமை காணப்படுகின்றது அவர்களுடைய வளங்கள் எங்கு இருக்கின்றது அவ் வளங்களை எப்படிப் பயன்படுத்தி இந்த மாவட்டத்தில் உற்பத்தி செயற்பாடுகளோடு தொடர்புகொள்ளலாம் என்ற வகையிலே செயற்பட வேண்டும் இது தொடர்பில் சமுர்த்தி அதிகாரிகளும் அற்பணிப்போடு செயற்படுவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.
எனவே வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் யுத்தம்,சுனாமி வெள்ளம் வரட்சி என்று பல்வோறு அனர்த்தங்களுக்குள்ளே தங்களது வாழ்வியலை தொலைத்திருக்கின்ற மக்கள் தாங்களும் தங்கள் பிள்ளைகளும் இந்த நாட்டிலே ஒரு கொளவமான பிரஜைகளாக வாழவேண்டும் என்று விரும்புகின்ற இந்த மக்களுக்கு தேவையான சேவைகளை அனைவரும் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய அவா. என அவர் தெரிவித்தார்.
இந் நிகழ்வின்போது தேசிய ரீதியில் தெரிவான சிறந்த சுயதொழில் முயற்சியாளர்களுக்கு அரசாங்க அதிபரால் சான்றிகழ்களும் வழங்கிவக்கப்பட்டது.












