மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள இரு சமுர்த்தி வங்கிகளிலும் சித்திரைப்புத்தாண்டு கொடுக்கல் வாங்கல் விசேட நிகழ்வு திங்கட்கிழமை (17ஆம் திகதி) நடைபெற்றது.
கரவெட்டி சமுர்த்தி வங்கியில், வங்கி முகாமையாளர் எம்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின்போது மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு அதிதியாக கலந்துகொண்டு இக் கொடுக்கல் வாங்கல் கைவிசேட நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு சமுர்த்தி பயனாளிகள் மத்தியில் உரையாற்றுகையில், சமுர்த்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் பயனாளிகள் இந்த சமுர்த்தி வங்கியை தமது பொருளாதாரத்தை உயர்த்தும்பொருட்டு சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சமுர்த்தி திட்டமும் வங்கிகளும் மிகக் குறைந்த வருமானம்பெறும் மக்களுக்காகவே அரசாங்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது, இங்கு இந்த வங்கி ஊடாக பலர் தமது வாழ்வில் பொருளாதாரத்தை உயர்த்தி நன்மையடைந்துள்ளனர்.
பல மில்லியன் ரூபா செலவில் மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் வழங்கிவருகின்றது, உதவிகளை யார் வழங்கினாலும் முயற்சி என்பது அம் மக்களிடையே இல்லாது போனால் அந்த திட்டத்திற்கோ பணத்திற்கோ பயனில்லாமல் போகும்.
எனவே வறுமை என்பது எவருக்கும் நிரந்தரமானதல்ல ஒவ்வொரு மனிதனிலும் நம்பிக்கையும் முயற்சியும் உறுதியாக இருந்தால் இந்த சமுர்த்தி வங்கி ஊடாகவே அவ்வாறான பயனாளிகள் வறுமையிலிருந்து விடுபட்டு சுபிட்சமான வாழ்வினை பெறமுடியும். என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச தலைமையக முகாமையாளர் த.சத்தியசீலன். திட்ட முகாமையாளர் கே.தில்லையம்பலம் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.












