(ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் வாழ்வின் உதயம் அமைப்பு என்பன இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பயனாக 'நம்பிக்கை ஒளி' அமைப்பின் நிதி அனுசரணையில் கட்டி முடிக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் தலைமையில் நடைபெற்றது.
இன்று திங்கட்கிழமை (17) காலை 10 மணியளவில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் நாடாவை வெட்டி வீட்டின் திறப்பை பயனாளியிடம் ஒப்படைத்தார். வாழ்வின் உதயம் அமைப்பின் தலைவர் சி.பரமானந்தம், சமூகசேவை திணைக்களத்தைச் சேர்ந்த சமூகசேவை உத்தியோகத்தர் அ.நஜீம், அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் மாற்றுத்திறனாளி அமைப்பின் பிரதிநிதிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி கவிதா என்ற இளம் குடும்பத்தினரின் வீடு தற்செயலாக தீப்பற்றி எரிந்த நிலையில் நிர்க்கதிக்குள்ளாகிய நிலையில் வாழ்வின் உதயம் அமைப்பு விடுத்த வேண்டுகோளிற்கமைவாக 'நம்பிக்கை ஒளி' அமைப்பினால் 145,000.00 ரூபாய் செலவில் இந்த நிரந்தரவீடு அமைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டதுடன் ஆரம்ப பிரிவு மாணவரின் கல்வி நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக துவிச்சக்கர வண்டி கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. குறித்த பயனாளி கருத்து தெரிவிக்கையில் வீடு தீப்பற்றி எரிந்த நிலையில் சொல்லொணாத துன்பங்களை அனுபவித்தோம். இந் நிலையில் மேற்படி உதவிகளைச் செய்த நம்பிக்;கை ஒளி அமைப்பிற்கு எனது குடும்பத்தாரின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

















