[By: NR]ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் புதிய கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது 24.04.2017 திங்கட்கிழமை இன்றைய தினம் தாழங்குடா கல்வியியல் கல்லூரியின் மாநாட்டுமண்டபத்தில் உயர் தேசிய தொழில் நுட்ப நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைகலாச்சார பீடத்தின் தலைவர் எம்.ரவி, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மற்றும் தாழங்குடா தேசிய கல்வியியல் கல்லூரியின் முதல்வர் எஸ்.இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் போது உயர் தேசிய தொழில் நுட்ப நிறுவகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் புதிய மாணவர்களையும் , அவர்களின் பெற்றோர்களையும் இன்முகத்துடன் அன்பாக வரவேற்றதுடன் இந்த நிகழ்வின்போது இரண்டாவம் வருட மாணவர்கள் 50பேருக்கு மகாபொல புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் இக்கல்லூரியில் கணக்கியல் டிப்ளோமா,உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா,உயர்தேசிய தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகள் இங்கு காணப்பட்ட போதிலும் இவ்வருடம் புதிதாக சுற்றுலா மற்றும் நலனோம்பு முகாமைத்துவம் பாடநெறி ஆரம்பிக்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு ஆயிரம்(1000) மாணவர்கள் இக்கல்லூரியில் புதிதாக உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நிகழ்வில் இரண்டாம் வருட மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சுமார் 2000 பேருக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




































